
சர்ச்சில் நடக்கும் ஆராதனையில் பாடுவதற்காக புறப்பட்டாள் ஜேனட். தன்னுடன் பாட இருக்கும் மெர்சி, மேரி, டெபி மட்டுமின்றி அங்குள்ள பெண்கள் அனைவரும் தன் ஆடை, நகைகளை ரசிக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. அதற்காக ஆடம்பரமாக உடுத்திக் கொண்டாள்.
ஏழையான மெர்சியோ கவரிங் நகைகளையே அணிந்தாள். அவளுக்கு நகை மீது ஆசை இல்லாவிட்டாலும் யாரும் தன்னை குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது.
பணக்கார பெண்ணான மேரிக்கு நகை மீது ஆசையே கிடையாது. உள்ளத்தின் அழகே ஆண்டவருக்குப் பிரியமானது என்பது அவளின் கருத்தாக இருந்தது. அத்துடன் தன்னைக் கண்டு யாரும் ஏக்கப்படக் கூடாது என எப்போதும் எளிமையை பின்பற்றுவாள்.
கடைசியாக இருப்பவள் டெபி. அவளுக்கு நகை என்றால் கொள்ளை ஆசை. ஆனால் அவளின் பெற்றோர் நகை அணிய அனுமதிப்பதில்லை. காரணம் தங்கம் அணிவது பாவம் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். அதனால் பெற்றோருக்குத் தெரியாமல் தன் தோழியரின் நகைகளை வாங்கி அணிய ஆசைப்படுவாள்.
இந்த நான்கு பெண்களும் ஒரே மேடையில் நின்று பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் குரலில் இனிமையும், உருக்கமும் கலந்திருந்தது. விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தனர் ஜேம்ஸ் இந்த பெண்களைக் கண்டதும்,''இதென்ன இவர்களிடம் ஒரு ஒழுங்கே இல்லையே! இருவர் ஆடம்பரமாக நகை அணிந்தும், மற்ற இருவர் மிக எளிமையாகவும் இருக்கிறார்கள்'' என ஏளனமாக எண்ணியபடி மேடை ஏறினார்.
அவரது கண்ணில் பட்ட வாசகம் அவருக்கு பதிலை தந்தது. 'புறத்தோற்றத்தை பொருட்படுத்தாதே. இல்லாவிட்டால் உண்மையை நீ உணர முடியாது. அகத்தோற்றத்தை காண்பவனே ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பான்'