
பணிவு பணிந்து பணிந்து ஜெயிக்கும்; துணிவு துணிந்து துணிந்து தோற்கும் என்பது வெற்றியாளர்கள் கண்ட உண்மை. இந்த பணிவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். உண்மை, உழைப்பு, நேர்மையின் இலக்கணம் இவர். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்த இவர் விடாமுயற்சியுடன் அமெரிக்காவின் அதிபராக முன்னேறினார். இவரது மகன் ராபர்ட் ஹார்வர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர். இவரும் தந்தையைப் போல் ராணுவப்பணியில் சேர விரும்பினார். இதையறிந்த லிங்கன், 'சரி. முயற்சி செய்வோம்' என்றார்.
ராணுவத் தளபதியை அழைத்து, 'என் மகன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறான். அவன் தகுதிக்கு ஏற்ற பணி இருந்தால் கொடுத்து உதவுங்கள். இதை நாட்டின் அதிபராக கேட்கவில்லை. தாய்நாட்டை நேசிக்கும் ஒரு மகனின் தந்தையாக கேட்கிறேன்' என்றார் பணிவாக. பணிவு, தாய்நாட்டுப் பற்றும் லிங்கனிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பண்பாகும்.