இங்கிலாந்து அருகிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர் ஆப்ரகாம். அவர் வளர்த்த 'பட்டீ' என்ற குதிரை இளைஞரின் கட்டளையை உடனே செயல்படுத்தும். ஒருநாள் அவரைத் தேடி வந்த நபர் ஒருவர், ''லண்டனைச் சேர்ந்தவன் நான். இங்குள்ள பாதை எனக்கு பழக்கமில்லாதது. வரும் வழியில் என் கார் கன்ட்ரோலை இழந்து சேற்றில் சிக்கியது. அருகில் இருந்தவர்கள் தங்களிடம் உதவி கேட்கச் சொன்னார்கள்''என்றார்.
குதிரையை அந்த காருடன் பிணைத்து கட்டுவதற்கு கயிறு போன்றவற்றை துாக்கிக் கொண்டு வந்தார் இளைஞர். குதிரைக்கு சிரமம் கொடுக்காதபடி வேலை வாங்கி காரை மேட்டிற்கு இழுக்க நினைத்தார். குதிரையைத் தட்டிக் கொடுத்து 'கேஸி' இழு என்றார். அமைதியாக நின்றது குதிரை. பின்னர் 'பெய்லி' இழுடா... ராஜா என குரல் எழுப்பினார். அது காதில் வாங்கவில்லை. ''டேய் 'மேண்டி' வேகமாக இழுடா'' என்றார். ஒரு அடி கூட நகரவில்லை. அடுத்த விநாடியில் ''பட்டீ... நீயும் சேர்ந்து இழுடா'' என்றார்.
என்ன ஆச்சரியம், கண் இமைக்கும் நேரத்தில் கார் மேட்டிற்கு வந்தது. ''பல பெயர்களில் அழைத்தீர்களே... ஏன் என கேட்டார்'' அந்த நபர். அதற்கு இளைஞர், ''என் குதிரைக்கு கண் தெரியாது. கஷ்டமான வேலையை செய்வதாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக அருகில் வேறு குதிரைகள் நிற்பது போல வெவ்வேறு பெயர்களைச் சொன்னேன்'' என்றார் இளைஞர். உன் பலம் உனக்கு தெரியாது. இதை உணர்ந்தால் எதையும் சாதிக்கலாம்.

