
மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் அளவிற்கு மக்கள் மாறி வருகிறார்கள். சுயநலம், அக்கறையின்மை, நேர்மையற்ற தன்மை, அலட்சிய புத்தி, சகிப்புத்தன்மை இல்லாமை, குரூர புத்தி, ஊழல் போன்றவையே மனிதநேயம் குறைவதற்கான காரணங்கள் என பட்டியல் இடுகிறது உளவியல்.
முன்பெல்லாம் பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல்நலக்குறைவு என்றால் ஓடி வந்து உதவி செய்வார்கள். சாலையில் மயங்கி கிடப்பவருக்கு தண்ணீர் கொடுத்து அவர்களை வீட்டுக்கு வந்து விட்டுச் செல்லும் முகம் தெரியாத மனிதர்கள், பேருந்தில் முதியவர், பெண்களுக்கு இடம் தரும் இளைஞர்கள், வீட்டிற்கு வந்தவர்களுக்கு வயிறார உணவளிக்கும் பெண்கள், முகவரி தெரியாமல் அலைவோருக்கு வழிகாட்டும் நபர்கள் இப்படிப்பட்டவர்களை இந்தக் காலத்தில் காண்பது அரிதாகி விட்டது. எங்கோ ஒரு இடத்தில் இன்றும் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் பூமி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் என்றோ காணாமல் போயிருக்கும். மனிதநேயம் கொண்டவர்களை ஆண்டவரும் நேசிக்கிறார்.

