
ஆண்டவர் மீது விசுவாசம் கொண்ட பெண் ஒருத்தி விண்ணப்பம் ஒன்றை ஆட்சியாளரிடம் கொடுத்தாள். குழந்தைகள், முதியவர்களுக்கு விடுதி கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தருமாறு வேண்டினாள்.
ஆட்சியாளரோ அவளின் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளவில்லை. விஷயம் கிடப்பில் போடப்பட்டது. அவளின் விடாமுயற்சியால் சில ஆண்டுக்கு பிறகு பாறைகள் சூழ்ந்த நிலம் ஒன்று அவளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. எல்லாம் நன்மைக்கே என அவள் நம்பினாள். பாறைகளை உடைத்து, கட்டடம் கட்ட ஏற்படும் செலவை திட்டமிட்ட போது மலைப்பாக இருந்தது. இருந்தாலும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை.
ஓரிரு மாதம் கடந்த பின் கான்ட்ராக்டர் ஒருவர் அவளைத் தேடி வந்தார். 'சகோதரி! நம் ஊரின் நடுவில் ஓடும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவைப்படுகிறது. உம் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்! அதற்கு ஈடாக நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்' என்றார். அவள் சம்மதித்தாள். பாறைகள் உடைக்கப்பட்டன. அந்த இடத்தில் நல்லவர்களின் ஒத்துழைப்பால் விடுதி கட்டி முடிக்கப்பட்டது.
நம்பிக்கை நம்மை வாழ வைக்கும்.

