அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். திடீரென ஒருநாள், 'பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ட்லே காருக்கு கல்லறை கட்டப் போகிறேன்' என நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். 'இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது' என பலரும் ஏசினர். குறிப்பிட்ட நாளில் மக்கள் கூடினர்.
அதில் ஒருவர், 'நீங்கள் காரை விற்கலாமே... ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்' எனக் கேட்டார். அப்போது அவர் சொன்ன விஷயம் அங்கிருந்தவர்களை சிந்திக்க வைத்தது. 'பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை புதைக்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல. பார்க்க வந்த நீங்கள் தான் முட்டாள்கள்.
இந்த காரையும் விட விலை மதிப்புடைய உடல் உறுப்புகள் நம்மிடம் உள்ளன. அதை மண்ணில் புதைத்து வீணாக்குகிறோம். எத்தனையோ பேர் உடற்குறையால் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் உதவலாமே... இறந்த பிறகு உறுப்பு தானம் செய்யுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தவே காருக்கு கல்லறை கட்டபோகிறேன் என்றேன். என் உடலுறுப்புகளை தானம் செய்ய சட்டப்படி ஏற்பாடு செய்த பிறகே இந்த அறிவுரையை உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார் அந்த கோடீஸ்வரர்.

