இரண்டு நாட்டுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒன்று பெரிய நாடு. இன்னொன்று சிறிய நாடு. பெரிய நாட்டிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். அவர்களுக்கு அண்டை நாட்டு மன்னர்களும் ஆதரவுடன் இருந்தனர்.
ஆனாலும் சிறிய நாடு பயப்படவில்லை. தன் பக்கத்திலுள்ள நியாயத்தை வெளிப்படுத்த போருக்கு தயாரானது. ஆனால் அங்குள்ள வீரர்கள் எதிரி மீதுள்ள பயத்தில் சோர்வுடன் இருந்தனர். அவர்களுடன் ஆலோசனை செய்ய வந்த அமைச்சருக்கு ஒரு யோசனை தோன்றியது. 'என் கையிலுள்ள நாணயத்தை இப்போது சுண்டுகிறேன். தலை விழுந்தால் போருக்கு செல்வோம். பூ விழுந்தால் எதிரியிடம் சரணடைவோம்' என்றார். வீரர்களும் கரகோஷம் எழுப்பினர். அமைச்சர் நாணயத்தை சுண்டினர். தலை விழுந்தது. ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையால் வீரர்கள் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
'சிறிய படை கொண்ட நம் நாட்டை வெற்றி பெறச் செய்தது எப்படி' எனக் கேட்டார் மன்னர். அதற்கு அமைச்சர், 'இக்கட்டான சூழலில் இதை பயன்படுத்து என என் தந்தையார் சொல்லியிருந்தார்' எனச் சொல்லி ஒரு நாணயத்தை காட்டினார் அமைச்சர். அதில் இரண்டு பக்கமும் 'தலை' இருந்தது. அமைச்சரின் சாதுர்யத்தைக் கண்ட மன்னர் வியந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. வீரர்களின் நம்பிக்கை, போர்த்திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது.

