
மனைவியை பிடிக்காததால் அவளை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டவன் ராபர்ட். அதனால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தான். மனைவியோ எதிர்ப்பு தெரிவித்தாள். ஆத்திரமடைந்த அவன், அவளைக் கொன்றால் மாட்டிக் கொள்வோம் என முடிவு செய்து ஒரு மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டான். அவன் ஒரு மருந்தைக் கொடுத்து, “இதை அவளுக்கு கொடு. பைத்தியம் பிடிக்கும். இதைக் காரணம் காட்டி விவாகரத்து கேள்” எனச் சொன்னான்.
மருந்துடன் வந்த ராபர்ட் நல்லவன் போல நடிக்க ஆரம்பித்தான். 'என்னை மன்னித்து விடு'' என அழுதான். உனக்காக சத்து மருந்து வாங்கி வந்துள்ளேன். இதைக் குடி” என்றான். கணவரின் நடிப்பை தெரிந்த அவளோ மருந்தை குடிக்க மறுத்தாள். மீண்டும் ஆரம்பித்தது சித்ரவதை. வலுக்கட்டயமாக வாயில் மருந்தை ஊற்றினான். அவள் ஆண்டவரை பிரார்த்தித்தாள். மருந்து வேலை செய்யவில்லை.
பணம் செலவழித்தும் பலன் கிடைக்கவில்லையே என மந்திரவாதியிடம் சண்டைக்குப் போனான். மந்திரவாதியின் தலையை சுவற்றில் மோதினான். அவன் இறக்க, ராபர்ட் சிறைக்குச் சென்றான். கெட்டவர்களான இருவரும் பாவத்திற்கான தண்டனையை அடைந்தனர். அந்த பெண்ணோ தேவாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

