ADDED : மார் 26, 2026 11:42 AM

அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். அவர் அரசியல்வாதி ஒருவரை திருப்திப்படுத்த ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவத்தினரை வேறொரு பகுதிக்குச் செல்ல உத்தரவிட்டார். ஆனால் ராணுவ செயலாளரான எட்வின் ஸ்டான்டன் அதை ஏற்க மறுத்ததுடன் 'உத்தரவு பிறப்பித்த லிங்கன் ஒரு முட்டாள்' எனக் கோபித்தார். லிங்கனுக்கு தகவல் சென்றது. ஆனால் அவர் கோபப்படவில்லை. “ஸ்டான்டன் சொன்னால் அது சரியாக இருக்கும். ஏனெனில் அவர் புத்திக்கூர்மை கொண்டவர்” என பாராட்டியதோடு, “என் முட்டாள் தனத்தை சரிசெய்யவும் விரும்புகிறேன்” என அவரை சந்திக்க அழைப்பும் விடுத்தார்.
உத்தரவை செயல்படுத்த மறுத்தது ஏன் என ஸ்டான்டன் தெளிவுபடுத்தினார். அதை ஏற்று லிங்கனும் உத்தரவைத் திரும்பப் பெற்றார். அதன் பின், “தங்களை பற்றி தவறாக பேசியதற்காக வருந்துகிறேன்'' என்றார். ''என்னை திருத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இந்த சம்பவத்தை கருதுகிறேன்” என்றார் லிங்கன். தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த போது கோபப்படவில்லை. அத்துடன் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படவில்லை. பிரச்னையை விவேகத்துடன் கையாண்ட லிங்கனின் மனநிலை அனைவருக்கும் அவசியம்.
