ADDED : ஏப் 23, 2026 12:27 PM
அந்த பலசாலி இளைஞனுக்கு வேலையே உடற்பயிற்சி செய்வதும், ஆணழகன் போட்டியில் பங்கேற்பதும் தான். இது அவனுடைய ஏழை பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ''வயதான காலத்தில் எங்களுக்கு உதவி செய். வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கு'' என்றனர்.
''சரி நான் போகிறேன். ஆனால், நான் என்னை விட பலசாலியான ஒருவரிடம் தான் வேலைக்குச் செல்வேன்.'' என வேலை தேடினான். ஒரு வழியாக அவனை விட பலசாலியான ஒருவரை கண்டுபிடித்து வேலைக்குச் சேர்ந்தான். அவரிடம் நல்ல சம்பளமும் கிடைத்தது.
சரி இவரிடமே இருந்து வாழ்க்கையை ஓட்டலாம் என நினைத்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒருநாள் நள்ளிரவில் இருவரும், ஒரு கல்லறையை கடக்கும் போது, அந்த பலசாலி நடுங்க ஆரம்பித்தான்.
இளைஞன் கேட்டான் ''ஏன் நடுங்குகிறீர்கள்?''
''அது... அது வந்து இங்க பிசாசு இருக்கு. அதான்...''
''அப்படியா... அந்த பிசாசு உன்னை விட பலம் வாய்ந்ததா...?''
''ஆமாம்!''
''அப்படியென்றால் நான் அந்த பிசாசிடம் வேலை பார்த்துக் கொள்கிறேன்.'' என அந்த பிசாசிடம் வேலைக்குச் சேர்ந்தான். பிசாசும் ஏற்றுக் கொண்டது. அதனிடம் மந்திர, தந்திரங்களை கற்று அதை வைத்துப் பிழைத்தான். பிசாசிடம் இருந்தால் யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தான். உலகில் பிசாசே பலம் வாய்ந்தது என நம்பியவனுக்கு ஒரு வியப்பு!
பிசாசுடன் சென்று கொண்டிருந்த போது ஒருநாள் ஆலயத்தில் ஜெபிக்கும் குரல் கேட்டது. பிசாசு முகத்தில் பயம் படர்ந்தது. தேவாலயம் கண்ணில் பட்டதுமே பிசாசு பின்வாங்கியது. இதைக் கண்ட அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தேவாலயத்தை நோக்கி ஓடினான். மண்டியிட்டு, கண்ணீர் மல்க பிரார்த்தித்தான்.
ஆண்டவருக்கே நான் வேலைக்காரனாக இருப்பேன் என சபதம் ஏற்றான்.
