ADDED : ஏப் 29, 2026 05:17 PM

முதலாளி ஒருவரிடம் வேலையாளாக இருந்தான் இளைஞன் ஒருவன். ஒருநாள் இருவரும் வெளியூர் சென்றனர்.
இருட்டியதால் ஒரு சத்திரத்தில் தங்கினர். குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, இரவு முழுதும் துாங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள் என்றார் முதலாளி.
இரவில் துாங்காமல் இருப்பது எப்படி எனக் கேட்டான். தீர்க்க முடியாத பிரச்னை பற்றி சிந்தித்தால் துாக்கம் வராது என்றார். அவனும் சரி என்றான்.
மூன்று மணி நேரம் கழித்து பணக்காரர் வந்த போது அவன், 'வானிலுள்ள நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாராவது கொண்டு வந்தார்களா என யோசித்தபடி இருக்கிறேன்' என்றான்.
சரி என்ற முதலாளி மீண்டும் துாங்கி விட்டு மூன்று மணி நேரம் கழித்து வந்தார்.
அவன் சொன்னான். உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கடலில் கொட்டினார்களா என யோசிக்கிறேன்' என்றான். நிம்மதியுடன் தூங்கச் சென்றார் முதலாளி.
காலையிலும் அவன் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த முதலாளி, 'இப்போது என்ன யோசிக்கிறாய்?' எனக் கேட்டார்.
அதற்கு, 'குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாராவது திருடிச் சென்று விட்டார்களா என யோசிக்கிறேன்' என்றான்.
இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் முதலாளி.
