ADDED : ஏப் 29, 2026 05:25 PM
அம்மாவுடன் கடைக்குச் சென்றாள் சிறுமி ஐடா. அங்கிருந்த பாசி மாலையை பார்த்ததும், இந்த மாலை எனக்கு வேணும்' எனக் கேட்டாள்.
'இது பிளாஸ்டிக் மாலை. உன்னோட பிறந்த நாளைக்கு அப்பாகிட்ட ஒரிஜினல் முத்து மாலை வாங்கச் சொல்றேன்' என்றாள் அம்மா.
அடம் பிடித்ததால் வாங்கிக் கொடுத்தாள் அம்மா. பள்ளிக்கூடம், பிரண்ட்ஸ் வீடு என எங்கு சென்றாலும் அணிந்தாள். சில நாள் துாங்கும் போதும் கூட சுழற்றவில்லை.
தொடர்ந்து அணிந்தால் மாலையின் நிறம் மங்கும் எனச் சொல்லியும் கேட்கவில்லை.
ஒருநாள் இரவில் கதை சொல்லிய அப்பா, 'இந்த மாலையை எனக்கு தருவாயா' எனக் கேட்டார்.
'முடியாது. வேற ஏதாச்சும் கேளுங்க... தர்றேன்' என்றாள்.
பரவாயில்லை வேண்டாம்' என்றார் அப்பா.
இதை போல இன்னொரு நாள் கேட்ட போதும், 'முடியாது' என மறுத்தாள்.
ஆனால் ஒருமுறை தானே வலிய அப்பாவிடம் வந்தாள். 'இந்தாப்பா நீ கேட்ட மாலை' எனக் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்ட அப்பா, ஓரிஜினல் முத்து மாலையை பரிசளித்தார்.
இது போல மனதில் கெட்ட எண்ணம், பழக்கம், தீய நட்பு, உறவுகளுடன் நாம் அலைகிறோம். அதனால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தே செய்கிறோம்.
நல்லதை அடைய விரும்பினால் போலிகளை புறக்கணியுங்கள். பரிசளிக்க காத்திருக்கிறார் ஆண்டவர்.
