ADDED : மே 07, 2026 09:07 AM
புலி, சிறுத்தைகள் வசிக்கும் குகையில் நாற்றம் அடிக்கும். காரணம் அங்கு அழுகிய இறைச்சி, தோல் முடி சிதறிக் கிடக்கும். ஆனால் சிங்கத்தின் குகையோ சுத்தமாக இருக்கும். ஏனெனில் தான் வேட்டையாடிய விலங்குகளை குகைக்கு கொண்டு வரும் வழக்கம் அதற்கு இல்லை.
குகையில் படுத்துறங்கும் சிங்கத்திற்கு பசி ஏற்பட்டால் உடலை அசைத்து தலையை ஆட்டியபடி கர்ஜிக்கும். அதைக் கேட்ட விலங்குகள் பயத்தால் குறுக்கும், நெடுக்குமாக ஓடும். அப்போது கண்ணில் படும் விலங்கைக் கொன்று பசியாறி விட்டு, மீதியை அங்கேயே விட்டு விடும்.
ஒவ்வொரு முறை பசிக்கும் போதும் சிங்கம் வேட்டையாடியே சாப்பிடும். அதோடு தன் கூட்டத்தோடு பகிர்ந்து உண்ணும். மற்ற விலங்குகள் குகைக்குள் நுழைவதை தடுப்பதற்காகவே சிங்கம் குகைக்குள் உணவை அனுமதிப்பதில்லை. தேவையான உணவு தன்னை வந்தடையும் என்ற நம்பிக்கை சிங்கத்திற்கு உண்டு. ஐந்தறிவு கொண்ட சிங்கத்திற்கு இருக்கும் நம்பிக்கை, சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கு வேண்டாமா... உன்னை நம்பு.
