ADDED : ஜூலை 02, 2026 10:36 AM

இளைஞன் ஒருவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். அவன் அம்பு எய்தால் குறி தப்பாது.
தற்பெருமை அவன் மனதில் அதிகரிக்க மற்றவரை மதிக்க தவறினான். இதையறிந்த ஆசிரியர், 'ஒரு திறமைசாலியின் எதிர்காலம் வீணாகக் கூடாது' என நினைத்தார். அதற்காக அவனை தனியாக காட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த இரண்டு பாறைக்கு நடுவில் கயிற்றால் ஆன தொங்கு பாலம் இருந்தது. கை வைத்து நடக்க அதில் பிடிமானம் இல்லை.
ஆனால் ஆசிரியர் துணிச்சலுடன் பாலத்தின் நடுவில் போய் வில்லில் நாண் ஏற்றி மரத்தின் உச்சியில் தொங்கும் பழத்தைக் குறி வைத்தார். பழம் கீழே விழுந்தது. 'நீயும் இதே போல செய்' என்றார். அவனோ பயத்துடன் நடந்து பாலத்தின் நடுவில் போய் நின்றான். ஆனால் கால்கள் நடுங்கின. அவனால் மேல் நோக்கி பழத்தை குறி வைக்க முடியவில்லை. பதட்டம் அதிகமாக பாலத்தை விட்டு இறங்கினான்.
'என்னப்பா... உன்னால் கூடவா முடியவில்லை' எனக் கேட்டார் ஆசிரியர். பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
'இன்னமும் கற்க வேண்டிய பாடம் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் இப்போதே எல்லாம் கற்று விட்டதாக கர்வப்படுகிறாய். யாரையும் மதிப்பதில்லை. இதனால் எதிர்காலம் என்னாகும் என யோசி. படித்தால் மட்டும் போதாது. மற்றவரை மதிக்கப் பழகு. அதுதான் கல்வியின் பயன்'' என்றார் ஆசிரியர்.
