ADDED : ஜூலை 30, 2026 07:59 AM
காலையில் எழுந்தது முதல் இரவு வரை நமக்கு எத்தனையோ தேவைகள். பால்காரர், நாளிதழ் போடுபவர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோக்காரர், நம் தேவைகள் எல்லாம் செய்து கொடுக்கும் மனைவி, பாசத்தை பொழியும் குடும்பத்தினர்... இப்படி பலருடைய உதவியோடு தான் நம் வாழ்க்கை நடக்கிறது.
இவர்கள் யாரையாவது பாராட்டியது உண்டா... இதுவரை இல்லாவிட்டால் இனி முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியும், நிறைவும் மனதில் மட்டுமல்ல, உங்களைச் சுற்றி எப்போதும் நிறைந்திருக்கும். நேராகவோ, அலைபேசி மூலமாகவோ மற்றவர்களை பாராட்டுங்கள்.
ஒரு திருமண வீட்டுக்கு போகிறீர்கள். சாப்பிடும் போது பரிமாறுபவரிடம், ''உங்க மாஸ்டர் எங்கே இருக்கார்... இப்பவே அவரிடம் பேசணும்'' எனச் சொல்லுங்க. அவரும் போய் சொல்லுவார். என்னமோ ஏதோன்னு சமையல் மாஸ்டர் ஓடி வருவார்.
'சாப்பாடு சூப்பர்' எனச் சொல்லிப் பாருங்கள். அப்படியே அவருடைய மனசுக்குள் மத்தாப்பூ பூக்கும். சொர்க்கமும் நரகமும் எங்கோ வானத்தில் இல்லை. நம் வாழ்க்கை முறையில் தான் உள்ளது. மற்றவரை மனதார பாராட்டுங்கள். வாழ்வு இனிக்கும்.
