ADDED : ஆக 03, 2026 01:28 PM
பாதிரியார் ஒருவரை சந்திக்க வந்த இளைஞன் ஒருவன், 'நல்லவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் முடியவில்லையே... ஏன்'' எனக் கேட்டான்.
அவனிடம் ஒரு சாக்கு பையைக் கொடுத்து, “கெட்ட எண்ணம் வரும் போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதில் எதிரியின் பெயரை எழுதி பையில் போடு. இதை எங்கு சென்றாலும் உன்னுடன் எடுத்துச் செல். பத்து நாள் கழித்து என்னிடம் வா' என்றார். அவனும் அப்படியே செய்தான். ஒரு வாரத்திலேயே சாக்குப்பை கனமாகி விட்டது. உருளைக் கிழங்குகள் அழுகியதால் துர்நாற்றமும் வீசியது.
பாதிரியாரை மீண்டும் சந்தித்து, “துர்நாற்றம் வீசுகிறது. கனமாகி விட்ட சாக்குப்பையை துாக்கவும் முடியவில்லை” என வருத்தப்பட்டான்.
“மனசும் அப்படித்தான். கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்களை சுமக்கும் போது சாக்கில் உள்ள உருளைக்கிழங்கு போல துர்நாற்றம் உண்டாகி விடும். மற்றவர் குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகு. நல்லவனாகி விடுவாய்'' என விளக்கம் அளித்தார். உண்மையை உணர்ந்தான் இளைஞன்.
