பலமுறை நடந்த பந்தயத்தில் முயலும், ஆமையும் மாறி மாறி வெற்றி பெற்று இரண்டும் நண்பர்கள் ஆயின. மீண்டும் ஒரு பந்தயம் 'ஆற்றை கடந்து செல்ல வேண்டும். ஒரே சமயத்தில் இலக்கை அடைந்தால்தான் இருவரும் உண்மையான நண்பர்கள்'' என்றது நடுவரான யானை.
இரண்டும் யோசித்தது... ஆமை ஆற்றில் நீந்தும் போது முயலை தன் முதுகிலும், முயல் தரையில் ஓடும் போது ஆமையைத் தன் முதுகிலும் ஏற்றியதால் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்து இரண்டும் வெற்றி பெற்றன. குழந்தைகளே கணிதத்தில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என படித்திருப்பீர்கள். ஆனால் வாழ்வில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்றாவதாக ஒருவித புதுபலம் கிடைக்கும். அதனால் தான் நிறுவனங்களில் ஆள் சேர்ப்புக்கு ' டீம் ஒர்க் திறன்' சோதிக்கப்படுகிறது. அலுவலகம் மட்டும் அல்ல... குடும்பத்திலும் டீம் ஒர்க் அவசியம்.
நிதானம், உற்சாகம், புது வழிமுறைகள் அனைத்தும் வாழ்விற்கு முக்கியம். யூ வின், ஐ வின் என்னும் அணுகுமுறை தற்காலத்திற்கு அவசியமாகி விட்டது. முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
ஆனால் 'முயலாமை' மட்டுமே ஜெயிக்காது. முயன்று தோற்றால் அனுபவம். முயலாமல் தோற்றால் அவமானம். வெற்றி நிலையும் அல்ல; தோல்வி முடிவும் அல்ல. முயற்சியை பொறுத்தே வெற்றியும் தோல்வியும்.