ADDED : மார் 01, 2024 02:24 PM

பள்ளிக்குச் செல்ல ஆட்டோவை அழைத்தாள் தமிழ் ஆசிரியை ஜெலினா. தாமதமாகச் சென்றால் தலைமை ஆசிரியை திட்டுவார் என பதட்டம் அவளின் கண்ணில் தெரிந்தது.
வழியில் காயத்துடன் நின்ற முதியவர் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக ஆட்டோவை மறித்தார். ஆனால் ஜெலினா பொருட்படுத்தவில்லை. பின்னர் சிக்னலில் குழந்தையுடன் நின்ற பெண் உதவி கேட்டும் கவனிக்காத மாதிரி திரும்பிக் கொண்டாள். பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் அன்று தலைமை ஆசிரியை விடுப்பில் இருந்ததால் வரவில்லை. வகுப்பிற்குள் நுழைந்தாள்.
ரட்சண்ய யாத்ரிகம் நுாலில் இருந்து, ''தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும் போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகிலார் தாம் செய்வதிவர் பிழையை மன்னியும் என்றெழிற் கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்'' என்ற பாடலை மாணவர்களுக்கு சொல்லி விளக்கம் அளித்தாள். (இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பாவிகளை மன்னிக்கும் விதத்தில் அமைந்த பாடல் இது) அப்போது முதியவரும், உதவி கேட்ட பெண்ணும் அவளின் கண் முன்னே வந்தனர். செய்த தவறுக்காக வருந்தினாள்.