ஜான் பகலில் கனவு கண்டபடி துாங்கினான். அப்போது விரல்கள் ஐந்தில் எது முக்கியம் என்ற கேள்வி எழுந்தது. கட்டை விரல், “என் உதவி அனைவருக்கும் தேவை; நான் தான் முக்கியம்” என்றது.
அதைக் கேட்ட சுட்டுவிரல்,“ஆளை சுட்டிக் காட்டுபவன் நானே” எனக் கூறியது. நடுவிரலுக்கோ கோபம், “எல்லோரையும் விட உயரமானவன் நான்” என்றது. “மோதிரத்தை எனக்கு மட்டுமே அணிவிப்பார்கள்'' என்றது மோதிர விரல். இதை எல்லாம் கேட்ட சுண்டு விரல், “ஆண்டவரை வணங்கினாலும், மனிதரை வரவேற்றாலும் நான் தான் முதலில் நிற்பேன். நால்வரும் எனக்குப் பின்பு தானே?” என்றது.
கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அப்போது 'லட்டு லட்டு' எனக் கூவியபடி அம்மா வந்தாள். கண் விழித்த ஜான், 'எனக்கு லட்டு' எனக் கையை நீட்டினான். ஐந்து விரல்களும் சேர்ந்து லட்டை வாங்கின. அப்போது அவனுக்கு உண்மை புரிந்தது. ஒற்றுமையாக வாழ்வதே நன்மை.