தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/எல்லாம் முருகனே...

எல்லாம் முருகனே...

எல்லாம் முருகனே...


ADDED : பிப் 19, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 02:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இபமுகற்கு இளையாய் போற்றி

ஈனர்மால் களையாய் போற்றி

சுப கவிப் புலவா போற்றி

சுருதி நுால் வலவா போற்றி

விபவ சிற்சுகனே போற்றி

விமல தேசிகனே போற்றி

தபவனப் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (1)

அருவுரு ஆவாய் போற்றி

அலைவுள மேவாய் போற்றி

குருவென வருவாய் போற்றி

குணநலம் தருவாய் போற்றி

பெருவினை அறுப்பாய் போற்றி

பிழையெலாம் பொறுப்பாய் போற்றி

தருவுயர் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (2)

கடவுளர் பதியே போற்றி

கருணை வாரிதியே போற்றி

திடமறை முடிவே போற்றி

சின்மய வடிவே போற்றி

சுடருமிழ் மணியே போற்றி

தொண்டர்கட் கணியே போற்றி

தடமலி பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (3)

சீர்வளர் முருகா போற்றி

சீதரன் மருகா போற்றி

கூர்வளர் வேலா போற்றி

குமரிதன் பாலா போற்றி

பேர்வளர் வீரா போற்றி

பிறங்கு கம்பீரா போற்றி

தார்வளர் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (4)

வரநதி புதல்வா போற்றி

வானவர் முதல்வா போற்றி

குரவணி வாகா போற்றி

குஞ்சரி பாகா போற்றி

அரன்மகிழ் குருவே போற்றி

அருட்பெருந் தருவே போற்றி

தரமுயர் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (5)

உரைமனம் ஒன்றாய் போற்றி

உயிர்தொறு நின்றாய் போற்றி

வரைபக வெறிந்தாய் போற்றி

மறைமுழு தறிந்தாய் போற்றி

விரை மலர் நீபா போற்றி

விண்ணவர் பூபா போற்றி

தரை புகழ் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (6)

வினை தவிர் மருந்தே போற்றி

மெய்யினர் விருந்தே போற்றி

நினை தருதெருளே போற்றி

நித்தியப் பொருளே போற்றி

வனை மலரடியாய் போற்றி

மாமணி முடியாய் போற்றி

தனை நிகர் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (7)

கலையொருங் குடையாய் போற்றி

கடுங்குறட் படையாய் போற்றி

மலை வருங்குகனே போற்றி

வள்ளி நாயகனே போற்றி

நிலை பெறுந்தனியே போற்றி

நிறையருள் கனியே போற்றி

தலைமையம் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (8)

திருப்பரங்கிரியாய் போற்றி

செந்திலுக்குரியாய் போற்றி

அருட்குணங் கடியாய் போற்றி

ஆவினன் குடியாய் போற்றி

இருக்குறுந் தேனே போற்றி

ஏரகத் தானே போற்றி

தருக்குதென் பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (9)

இமிழ்திரை முடித்தாய் போற்றி

எதிர்ந்து சூர்மடித்தாய் போற்றி

அமிழ்தினும் இனியாய் போற்றி

அன்பரை முனியாய் போற்றி

உமிழ்தரு கிரணா போற்றி

உயர்குணா பரணா போற்றி

தமிழ்தழை பழநி மேவும்

சண்முகா போற்றி போற்றி (10)

மாதா பிதா குரு தெய்வங்களெல்லாம் இங்கெனக்கு

நீதான் எனை விலக்கல் நீதியன்றால் - ஆதாரம்

வேறுணர்கிலேன் பழநி வித்தகா வெவ்வினையை

நீறுசெயல் வேண்டுமின்றே நேர்ந்து

- பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us