ADDED : அக் 01, 2026 08:29 AM

ஸ்ரீலீலா.ஆர், தேவனஹள்ளி, பெங்களூரு: மவுன விரதம் என்றால் பேசாமல் இருப்பது தானே...
பேசாமல் இருப்பதுடன், எதையும் சிந்திக்காமல் இருப்பது நல்லது.
மரகதம்.எம், மயிலாப்பூர், சென்னை: கோயிலில் நான் விளக்கு ஏற்றினால்...
கிரக தோஷம் விலகி விருப்பம் நிறைவேறும். மனம் துாய்மை ஆகும்.
சரவணன்.கோ, திருநள்ளாறு, புதுச்சேரி: பிரார்த்தனை, தொண்டு - எது உயர்ந்தது?
பிரார்த்தனையில் கூட சுயநலம் இருக்கும். பொதுநலத் தொண்டே உயர்ந்தது.
கீர்த்தி.மா, வால்பாறை, கோயம்புத்துார்: கடனால் சிரமப்படும் எனக்கு திருமணம் நடந்த நேரம் சரியில்லை என்கின்றனர் பெற்றோர். பரிகாரம் உண்டா...
வெள்ளி தோறும், உங்களுக்கு விருப்பமான கோயிலுக்கு மனைவியுடன் செல்லுங்கள்.
ராம்.ரா, திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: தேவாரத்தில் வரும் 'ஆணை நமதே' என்றால் என்ன?
நல்லதே நடக்கும் என சிவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறார் திருஞானசம்பந்தர்.
கோபால்.வி, கமுதி, ராமநாதபுரம்: மனிதனால் தெய்வ நிலைக்கு உயர முடியுமா?
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தால் தெய்வ நிலைக்கு உயரலாம்.
ரவிபிரசாத்.பா, வள்ளியூர், திருநெல்வேலி: காசிக்கு சென்றதில்லை. அந்த புண்ணியத்தை பெறுவது எப்படி?
காசிக்கு நிகரான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதுார், சாயாவனம்(மயிலாடுதுறை), ஸ்ரீவாஞ்சியம், அவினாசி, தென்காசி, காஞ்சிபுரம், மயிலாப்பூர்(சென்னை).
மணி.எஸ், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர்: முச்சந்தி, முட்டுச்சந்து வீட்டில் வசித்தால்...
வீட்டு வாசலில் விநாயகர் சிலையை வையுங்கள்.
அன்பு.வே, ஆண்டிபட்டி, தேனி. பெற்றோரின் திதியை மகன்கள் தனித்தனியாக செய்யலாமா?
ஒற்றுமையாக திதி செய்வதே பெற்றோரை திருப்திபடுத்தும்.
