
ஆர்.கமலினி, கன்னிவாடி, திண்டுக்கல்.
*சிவராத்திரியன்று அன்னதானம் செய்யலாமா?
சிவனுக்காக விரதமிருந்து விழித்திருக்கும் நாள் சிவராத்திரி. விரதம் இல்லாதவர்கள் மட்டும் அன்னதானம் செய்யலாம்.
வி.பவித்ரன், திருத்தணி, திருவள்ளூர்.
*சிவ மந்திரம் ஜபித்தால் தீய பண்புகள் தீருமா...
நமசிவாய, சிவாயநம மந்திரங்களை தினமும் ஜபிக்க தீய பண்புகள் தீரும்.
எம்.ராகவி, நல்லாத்துார், கடலுார்.
*மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி - வேறுபாடு என்ன?
பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை தன் கழுத்தில் அடக்கி உலகைக் காத்தார் சிவன். இது மாசி தேய்பிறை சதுர்த்தசியன்று நடந்தது. இந்நாளை மகாசிவராத்திரியாகவும், மற்ற மாதங்களில் மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.
ஜி.விஷால், தேவனஹள்ளி, பெங்களூரு.
*மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்யலாமா...
பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆயுள், உடல் நலம் பெருகும். நிம்மதி கிடைக்கும்.
கே.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.
*மகாபிரளயம் என்றால் என்ன?
கலியுகம் முடிந்ததும் இந்த உலகத்தை சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொண்டு, உயிர்களுக்கு எல்லாம் பேரின்பம் அளிப்பார். இதை மகாபிரளயம் என்பர்.
வி.விக்ரம், சுரண்டை, திருநெல்வேலி.
*யோக சிவராத்திரி என்றால் என்ன?
திரயோதசி - பார்வதி
சதுர்த்தசி - சிவன் இந்த இரு திதிகளும் திங்கட்கிழமையன்று ஒன்று சேர்வது யோக சிவராத்திரி.
கே.பாஸ்கர், ஒண்டிப்புதுார், கோயம்புத்துார்.
*சிவன் கோயிலுக்கு செல்ல நேரம் பார்க்க வேண்டுமா?
'ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்' இதை சிந்தித்தபடி உடனே கோயிலுக்குச் செல்லுங்கள்.
எஸ்.வைஜந்தி, கரோல்பாக், டில்லி.
*சிவராத்திரியன்று மந்திர தீட்சை பெறலாமா?
மந்திர தீட்சை பெற்று, ஜபிக்கத் தொடங்குவது நல்லது.
எஸ்.அவினாஷ், கொட்டாம்பட்டி, மதுரை.
*சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பதில்லையே...
சில சிவன் கோயில்களில் தீர்த்தம் கொடுக்கின்றனர். இதைக் குடித்தால் பாவம் தீரும். அகால மரணம் நிகழாது.
எம்.ராஜாராம், கருங்கல், கன்னியாகுமரி.
*கனவில் நல்ல பாம்பு என்னைக் கொத்தியது. பரிகாரம் என்ன?
சிவனருளால் நல்லதே நடக்கும். பணம், புகழ் சேரும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.