
*எந்த மாதம் குலதெய்வ வழிபாட்டுக்கு ஏற்றது?
எம்.பூரணி, பொன்னேரி, திருவள்ளூர்.
முன்னோர்கள் நிர்ணயித்த மாதத்தில் வழிபடுங்கள். தற்போது மகாசிவராத்திரி, பங்குனி உத்திர நாட்களில் குலதெய்வ வழிபாட்டை நடத்துகின்றனர்.
*பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது ஏன்?
எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி.
பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்தால் மணவாழ்வு சிறக்கும்.
*பங்குனி மாதத்தில் அரசுப் பணிக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்குமா?
எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.
வெற்றி கிடைக்கும். அரசுப்பணியில் சேர, அரசு ஒப்பந்தம் பெற பங்குனி உத்திர நாளில் முயற்சி செய்யுங்கள்.
*செவ்வாய் தோஷம் தீர...
ஆர்.வைதேகி, கல்யாண்புரி, டில்லி.
செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், நவக்கிரக சன்னதியிலுள்ள செவ்வாய்க்கு அர்ச்சனையும் செய்யுங்கள்.
*பங்குனி உத்திரத்திற்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
எஸ்.பிருந்தா, ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி.
சிவனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக முருகப்பெருமான் அவதரித்த நாள் பங்குனி உத்திரம்.
*சபரிமலை ஐயப்பன் குத்துக்காலிட்டு இருப்பது ஏன்?
கே.காருண்யா, பட்டிவீரன்பட்டி, தேனி.
முழங்காலைக் கட்டியும், கைகளை நீட்டியும் குத்துக்காலிட்டு அமர்வது 'யோக முத்திரை. இது புலன் அடக்கம், தவத்தின் சிறப்பை உணர்த்துகிறது.
*ஆங்கில மாதத்தில் எட்டாம் தேதியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
ஆர்.கவிதா, காரைக்குடி, சிவகங்கை.
வெளிநாட்டினர் எட்டாம் தேதியை தவிர்க்கின்றனர். பஞ்சாங்கத்தின்படி நல்ல நாளாக இருந்தால் சுபநிகழ்ச்சியை நடத்தலாம்.
*பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடலாமா?
ஜே.கிஷோர், குன்னுார், நீலகிரி.
வழிபடலாம். அன்று (மாலை 4:30 - 6:00 மணி) நரசிம்மருக்கு விளக்கேற்ற கிரகதோஷம் விலகும்.
*ஸ்ரீமதி, திருமதி, சவுபாக்கியவதி என பெண்களைக் குறிப்பிடுவது ஏன்?
எஸ்.ஆனந்தி, சன்னபட்னா, பெங்களூரு.
பெண்களை கண்ணியத்துடன் பார்க்கிறது ஹிந்து மதம். பெண்கள் சிறப்பாக வாழ மேற்கூறிய அடைமொழிகளை பயன்படுத்துகிறோம்.