
*பேராசை உள்ளவர்களை எப்படி திருத்துவது?
ஜி.பானு, திர்லோக்புரம், டில்லி.
பணத்தால் சாதிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். பணம் மட்டும் மகிழ்ச்சி தராது. அவர்கள் திருந்த தெய்வத்தை வேண்டுங்கள்.
*அதிதேவதை என்பது யாரைக் குறிப்பிடுகிறது?
கே.சாய்சரண், பணகுடி, திருநெல்வேலி.
நவக்கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் அதிதேவதை உண்டு. இவர்களை வழிபட்டால் கிரகதோஷம் மறையும். உதாரணமாக கேதுதோஷம் தீர அதன் அதிதேவதையான விநாயகரை வழிபடுங்கள்.
*தந்தை, குழந்தைகளின் உறவு பலம் பெற...
ஜி.பிரகாஷினி, சோழிங்கநல்லுார், சென்னை.
ஞாயிறு தோறும் சூரிய ேஹாரையில் (காலை 6:00 - 7:00 மணி) சூரிய பகவானுக்கு தாமரை மலர் சாத்தி வழிபடுங்கள்.
*வீட்டிலேயே சுவாமிக்கு வடைமாலை சாத்தலாமா?
வெ.சாத்விகா, தேவதானப்பட்டி, தேனி.
வடைமாலை சாத்தலாம். அக்கம் பக்கத்தினருக்கு கட்டாயம் வடையை பிரசாதமாக கொடுங்கள்.
*சுவாமிக்கு எலுமிச்சை மாலை சாத்துவது ஏன்?
பி.விநாயக்ராம், மாகடி, பெங்களூரு.
எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்பது இதன் நோக்கம். மேலும் நோய், எதிரி தொல்லை, திருஷ்டி, தடை விலகும்.
*சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே போகலாமா...
பி.ஸ்வேதா, திருநகர், மதுரை.
சிவன்(சத்தியம்), நந்தி(தர்மம்) இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கோயில்களில் இருப்பர். இவர்களின் குறுக்கே போவது பாவம்.
*வெளியே செல்ல வேண்டியிருந்தால் விளக்கை சீக்கிரமாக ஏற்றலாமா?
வி.கிருஷ்ணா, நெய்வேலி, கடலுார்.
வெளியே கிளம்புவதற்கு முன்பே விளக்கை ஏற்றுங்கள். வீட்டை பூட்டும் முன் விளக்கை அமர்த்துங்கள்.
*நெல்லி மரம் வீட்டில் வளர்க்கலாமா?
வி.அட்சயா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.
வளர்க்கக் கூடாது. நெல்லி மரத்தை தோட்டம் அல்லது வயலில் வளர்க்கலாம்.
*கொடிமரம் உள்ள கோயில், இல்லாத கோயில் - பலனில் வேறுபாடு உண்டா?
பி.கவுதம், திருவட்டாறு, கன்னியாகுமரி.
வேறுபாடு இல்லை. கொடிமரம் உள்ள கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்.