
*கோயிலில் அபிஷேகத்தின் போது திரையிடுவதில்லையே...
எம்.கோமதி, புழுதிவாக்கம், சென்னை.
முதலில் சுவாமியின் திருமேனியை மறைத்து வஸ்திரம் சாத்துவதால், திரையிட வேண்டிய அவசியம் இல்லை. இதன் பின்னரே அபிஷேகம் நடக்கிறது.
*தண்ணீரால் நம் மனதின் சக்தி அதிகரிக்குமா?
வி.அனந்தராமன், கோவில்பட்டி, துாத்துக்குடி.
ஆம். தெய்வீக சக்தி கொண்ட தண்ணீரால் பாவம் நீங்குவதோடு மனதின் சக்தியும் அதிகரிக்கிறது.
*வைராக்கியம் என்றால் என்ன?
எம்.வனிதா, கிணத்துக்கடவு, கோயம்புத்துார்.
வி+ராகம் = வைராக்கியம்; வி - மேலான; ராகம் - விருப்பம். குறிக்கோளை (மேலான விருப்பத்தை) அடையும் வரை மற்ற ஆசைகளை பின்னுக்குத் தள்ளுங்கள்.
*கோயிலில் செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன?
எம்.சுதர்சன், சிதம்பரம், கடலுார்
உரக்கப் பேசுதல், பலமாகச் சிரித்தல், சாப்பிடுதல், துாங்குதல், அசுத்தப்படுத்துதல் ஆகியவை கூடாது.
*தினசரி வாழ்வில் கடவுளை நினைப்பது எப்படி?
கே.ரமா, மேலுார், மதுரை.
கடவுளை வழிபடவே பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு வேண்டும். அதிகாலையில் எழுதல், ஆசனம், மூச்சுப்பயிற்சி, குளியல், வழிபாடு, உணவு, கடமையாற்றுதல் என செயல்படுங்கள். மேலும் கடவுளின் திருநாமத்தை மனதிற்குள் உச்சரித்தபடி இருங்கள்.
*உழைத்து சம்பாதித்தும் கையில் பணம் தங்கவில்லையே...
வி.மயூரி, அடகூர், மைசூரு.
சரியான திட்டமிடுதல் அவசியம். கைக்கு பணம் வந்ததும் செலவழித்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது. வருமானத்திற்கேற்ப தேவையைக் குறையுங்கள்.
*பிறந்த நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?
பி.பர்வதம், திசையன்விளை, கன்னியாகுமரி.
பெரியோரை வணங்குதல், கோயிலில் வழிபடுதல், ஏழைகளுக்கு உதவி செய்யலாம். இதனால் ஆயுளும் அதிகரிக்கும்.
*உடல்நலத்துடன் வாழ ...
எஸ்.பிரபாவதி, உத்தமபாளையம், தேனி.
மனஇறுக்கம், படபடப்பு, கோபத்தை தவிருங்கள். சத்தான உணவை உண்ணுங்கள். தினமும் வழிபாடு செய்யுங்கள்.
*பகவத் கீதையை ஒரு வரியில் சொல்லுங்கள்.
ஆர்.வித்யா, கண்டமங்கலம், புதுச்சேரி.
கடவுளைச் சரணடை; கடமையைச் செய்; பலன் கிடைக்கும்.
*விதி என்றால் என்ன?
எம்.அனிதா, கரோல்பார்க், டில்லி.
இப்படித்தான் இதைச் செய்ய வேண்டும் என வரையறுக்கும் சட்டம் தான் விதி.