
*தேவையான இடத்தில் பொய் சொல்லலாமா?
எல்.சந்தோஷ், சிவகிரி, தென்காசி.
சுயநலம் கூடாது. தர்ம வழியில் நன்மை நடக்கும் என்றால், பொய் சொல்வது பாவம் ஆகாது.
*மறையுடையாய் தோலுடையாய்... பதிகத்தின் சிறப்பை சொல்லுங்கள்.
எல்.மகாதேவன், ஒசகோட்டே, பெங்களூரு.
வரம் தரும் அற்புதப் பதிகம் இது. திருஞானசம்பந்தர் இதில் 'குறையுடையார் குற்றம் ஓராய்' என்கிறார். அதாவது குற்றம், குறை உள்ளவர்களுக்காக சிவனிடம் இப்பாடல் மூலம் மன்னிப்பு கேட்கிறார்.
*தர்ப்பை புல்லின் சிறப்பு என்ன?
எம்.மாலதி, வில்லிவாக்கம், சென்னை.
மின்சாரத்தைக் கடத்தும் செப்புக் கம்பி போல, மந்திரஒலி அதிர்வுகளை தெய்வத்திடம் சேர்ப்பது தர்ப்பை புல்.
*சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது திரையிடுவது ஏன்?
கே.ராஜி, நொய்டா, டில்லி.
நைவேத்யம் செய்யும் போது திருஷ்டி தோஷம் ஏற்படலாம். அதனால் திரையிடுவது அவசியம்.
*பொறாமை, புறம் பேசுதல் இரண்டும் ஒன்றா...
வி.சுகந்தி, கொட்டாம்பட்டி, மதுரை.
இல்லை. பிறர் வளர்ச்சி கண்டு ஆத்திரப்படுவது பொறாமை. ஒருவர் இல்லாத போது அவதுாறு பேசுவது புறம் பேசுதல். அதாவது இல்லாத பிரச்னையை உருவாக்குதல்.
*மாணவர்களுக்கான முதன்மை பண்பு எது?
வி. அம்பிகா, கண்டமங்கலம், புதுச்சேரி.
பெற்றோர், ஆசிரியர் சொல்லும் நல்ல விஷயங்களை பின்பற்றுதல்.
*திருவோட்டை தானமாக கொடுக்கலாமா?
எம்.கேதார்நாத், மடத்துக்குளம், திருப்பூர்.
துறவிகளுக்கு மட்டும் தானமாக கொடுங்கள்.
*புண்ணியம், பாவம் என்பது என்ன?
கே.ரோகிணி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.
தர்மத்தின் அடிப்படையில் பிறருக்கு நன்மை தரும் செயல் புண்ணியம். பிறருக்கு துன்பம் தரும் செயல் பாவம்.
*பூலோக கைலாயம் என்றால் என்ன?
எஸ்.சுரேந்தர், கடமலைக்குண்டு, தேனி.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு மிக்க சிவத்தலங்கள் பூலோக கைலாயம். உ.ம். சிதம்பரம், மதுரை, திருவையாறு, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை.
*முருகபக்தரான குமரகுருபரர் முக்தி அடைந்த நாள் எது?
சி.ஆருத்ரா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
பிறந்த நட்சத்திரம் பற்றிய குறிப்பு இல்லை. திருச்செந்துார் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்தார். வைகாசி தேய்பிறை திரிதியை திதியில் சிவனடி சேர்ந்தார்.