
ஆர்.பிரபு, கள்ளிக்குடி, மதுரை.
*சாப்பிட்டதும் இலையை மூடலாமா...
சுபநிகழ்ச்சியின் போது இலையை மூடக் கூடாது. அசுப நிகழ்ச்சியில் மூடலாம்.
வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*திருநீறை எந்த திசை நோக்கி பூச வேண்டும்?
காலையில் கிழக்கு நோக்கியும் (மதியம் 12:00 மணி வரை), மற்ற நேரத்தில் வடக்கு நோக்கியும் பூச வேண்டும்.
எஸ்.வினிதா, மடிவாலா, பெங்களூரு.
*சுமங்கலி பிரார்த்தனைக்கான ஸ்லோகம் என்ன?
மங்களே மங்களா தாரே
மாங்கல்யே மங்கலப்ரதே|
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா||
ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.
*என்றும் பதினாறு என வாழும் மார்க்கண்டேயரின் பெற்றோர் யார்?
தாயார் மருத்துவதி. தந்தையார் மிருகண்டு முனிவர்.
டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*யாருடைய கண்ணீரை பார்க்கக் கூடாது?
பிள்ளைகளின் கண்ணீரை பெற்றோர், பெற்றோரின் கண்ணீரை பிள்ளைகள் பார்க்கக் கூடாது. ஒருபோதும் இதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்.
பி.மைதிலி, ஜனக்புரி, டில்லி.
*புராணங்கள் மொத்தம் எத்தனை?
18. வியாசரால் இயற்றப்பட்ட இதை 'பதினெண் புராணங்கள்' என அழைக்கிறோம்.
எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.
*மறந்தும் பிறன்கேடு சூழற்க என்பதன் பொருள் என்ன?
மனதாலும் ஒருவருக்கு தீங்கு நினைக்க கூடாது. மீறினால் தர்மதேவதையால் தண்டிக்கப்படுவீர்கள்.
வி.ராஜன், மேலப்பாளையம், திருநெல்வேலி.
*பிறவிக் குணங்கள் எவை?
காமம், குரோதம். அதாவது ஆசை, கோபம். இவை இரண்டையும் ஒழிக்க முடியாது. குறைக்கலாம்.
கே.மணிவண்ணன், அனுப்பர்பாளையம், திருப்பூர்.
*இசையின் பெற்றோர் யார்?
ஸ்ருதியை மாதா என்றும், லயத்தை பிதா என்றும் குறிப்பிடுவர். தடுமாற்றம் இல்லாமல் ஸ்ருதி ஒலிக்க வேண்டும். தாளத்திற்கு ஏற்ப இசை செல்ல வேண்டும்.
எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.
*பெரியவர், துறவிகளை வணங்கும் போது காலை தொட்டு வணங்கலாமா?
தேவையில்லை. கை குவித்து வணங்கினால் போதும்.