ADDED : மே 11, 2016 02:10 PM

* வலம்புரி சங்கு வழிபாடு செய்வதன் சிறப்பு என்ன?
எஸ்.எம் இந்திரன், பழநி.
எந்த பொருளாக இருந்தாலும் அவற்றில் உயர்ந்தது என்று ஒன்று இருக்கும். இடம்புரி சங்குகள் நிறைய கிடைக்கும். வலம்புரி சங்குகள் அரிதாகவே கிடைக்கும். இடமாக இருப்பதைவிட வலமாக இருக்கும் எல்லாமே சிறப்புடையவை. வலம்புரி விநாயகர்கூட சிறப்பு
பெற்றிருக்கிறார். நினைத்த செயல்களை முடித்து தரும் சக்தி இவ்வகை பொருட்களுக்கு உண்டு. இன்னொரு விஷயம்... எல்லாரும் அதிகம் விரும்புகிறார்கள் என்பதால் இவற்றிலும் போலிகள் மலிந்து வருகின்றன. கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
** கோவிலுக்கு கோவில் ஒவ்வொரு தல விருட்சம் வைத்திருப்பது ஏன்?
ரக் ஷனி பாபு, கடலூர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் உள்ள கோவில்கள்தான் 'ஷேத்திரம்' எனப்படும். மூர்த்தி என்றால் மூலஸ்தான இறைவன். தலம் என்றால் தல விருட்சம். தீர்த்தம் என்றால் திருக்குளம். இதில் தல விருட்சமும் மூலஸ்தானத்தைப்போல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அக்கோவில் தோன்றுவதற்கு முன்பு இறைவன் அந்த மரத்தடியில் தான் இருந்திருப்பார். இறைவனுக்கு நிழல் தந்த பெருமையைக் கொண்ட அந்த மரம் அருட்சக்தியை தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு கோவிலின் வரலாறுப்படி இது வெவ்வேறு மரங்களாக இருக்கும்.
கோவிலில் மற்றவர்கள் ஏற்றிய தீபத்தில் நாம் விளக்கின் திரியை ஏற்றலாமா?
பி.முனியசாமி, திண்டுக்கல்.
தாராளமாக ஏற்றலாம்.
* சனி பிரதோஷத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?
வி.பாக்கியலட்சுமி, மதுராந்தகம்.
அமுதம் வேண்டி தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் தோன்றியது. இதனால் எல்லோரும் மயக்கமுற்றனர். அந்த விஷத்தின் கொடுமையில் இருந்து தேவர்களையும் இவ்வுலகையும் காப்பாற்ற, அதை உருண்டையாக்கி உண்டார் சிவன். இதனால் மயக்கமுற்ற நந்திதேவருக்கு காப்பு அரிசியைக் கொடுத்து அவர் மற்றும் தேவர்களின் மயக்கம் நீக்கியது பிரதோஷ வேளை என்னும் மாலைப்பொழுது என்பது பொதுவான விஷயம். தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷம் வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால், இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடந்தது என்பது தெரியாத விஷயம். இதனால் தான் சனி பிரதோஷத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
