ADDED : மே 16, 2016 10:39 AM

* கோவில்களில் கருங்கல் சிலை, பளிங்குசிலை என இருவிதமாக இருப்பது ஏன்?
வ.சந்திரா, மதுரை.
சில அபூர்வ சக்திகளையுடையது கருங்கல். ஒலி அதிர்வு என்னும் ஆற்றல் உடையதால் உச்சரிக்கப்படும் மந்திரங்களை ஈர்த்து சிலையின் தெய்வ சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான் கோவில்களையும் தெய்வ சிலைகளையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கருங்கல்லிலேயே வடித்தார்கள். பளிங்கு சிலை என்பது வடநாட்டிலிருந்து வந்த வழக்கம்.
சுபநிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் அட்சதையை தயார் செய்வது எப்படி?
ஆர்.சியாமளா, சிட்லபாக்கம்.
முனை உடையாத பச்சரிசியில் சுத்தமான மஞ்சள் தூள் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கையினால் கலந்து கொண்டால் அட்சதை தயார். 'சோபனாட்சதை' என்றும் சொல்வர்.
** உழவாரப்பணி செய்தால் இறையருள் பெறலாமா?
உமா மகேஸ்வரி, பெருங்களத்தூர்.
இதைவிட சிறந்த புண்ணிய செயல் எதுவும் கிடையாது. உழவாரப்பணி செய்தே சிவபெருமானை நேரில் தரிசித்தவர் திருநாவுக்கரசர். பழங்காலத்தில் கோவில்களில் கொடுத்த நைவேத்யங்களையும், சிறுதொகையையும் பெற்றுக்கொண்டு தெய்வ காரியமாக ஒரு தொண்டாகச் செய்தார்கள். சில கோவில்களில் இதற்காக மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலை முற்றிலுமாக மறைந்து விட்டது. இதனால் பலகோவில்களில் புதர்களும் மரங்களும் வளர்ந்து பாழடைந்து கிடக்கிறது. ஒரு சில கோவில்களில் மட்டும் பக்தர்கள் முடிந்த வரை இதைச் செய்கிறார்கள். நம்மை வாழ வைக்கும் தெய்வத்தின் கோவிலை எந்தப்பலனும் எதிர்பாராமல், உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் பலனடைவார்கள்.
* கங்கை ஆரத்தி என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகிறது?
என்.ஜே.ரவி விக்னேஷ், திருப்பூர்.
வானுலகில் மந்தாகினி என்ற பெயரில் உள்ள கங்கையை பூலோக புனிதத்திற்காக வரவழைக்க பகீரதன் என்னும் அரசன் தவம் செய்தான்.
சிவபெருமான் தமது சடையில் அந்த நதியை வாங்கி, இமயமலையின் கங்கோத்ரி என்னும்இடத்தில் ஊற்றாக உண்டாக்கி பிறகு ஜீவநதியாக காசி முதலான புண்ணியத்தலங்களில் பாயுமாறு அருளினார். பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என பல பெண் தெய்வங்களின் வடிவானவள் கங்காதேவி. தினமும் காசிக்கும், ஹரித்வாருக்கும் செல்லும் பக்தர்களுக்கு புனிதமான கங்கா மாதாவின் அருள் கிடைக்க மங்கள ஆரத்தி செய்யப்படுகிறது. இதனால் பாவங்கள் நீங்கும்.
