ADDED : மே 22, 2016 11:37 AM

ஆண், பெண்களுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்ய ஏற்றநாள் எது?
ஜெ.உஷா விழுப்புரம்.
பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும், எல்லாரும் புதன்கிழமையிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
எஸ்.விஜயலட்சுமி, திருத்தங்கல்.
ராகு கிரகம் அசுரனாக இருந்து தெய்வமாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கிரகத்தின் அதிதேவதையாக துர்க்கை இருப்பதால் அவ்வேளையில் வழிபடும் வழக்கம் வந்தது. பின்பு பைரவர் போன்ற உக்கிர வடிவ தெய்வங்களையும் ராகு காலத்தில் வழிபடும் வழக்கம் வந்துள்ளது. ராகு காலம் வீரியமுள்ள காலம். அக்காலத்தில் துர்க்கை, பைரவர் போன்றோரை வழிபட நன்மை ஏற்படும்.
** சுபநிகழ்ச்சிகளை வளர்பிறையில் நடத்த விரும்புவது ஏன்?
ஆர்.ஜெயபாரதி, சாத்தூர்.
உத்தமம் சுக்லபட்சம் (வளர்பிறை) மத்யமம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்பார்கள். சாத்திரங்கள் வளர்பிறையை சிறப்பானதாகக் கூறுகின்றன. பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் தெரியும் நாட்களில் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகள் சூரிய சந்திரர்களின் சாட்சியாக
செய்யப்படுவதாக பொருள்படும். இதனால் வளர்பிறை நாட்களை தேர்ந்தெடுத்தனர். தேய்பிறையில் சந்திரன் தெரிவதில்லைஎன்பதால் தவிர்க்கிறார்கள். ஆனால், இந்நாட்களிலும் சில விதிவிலக்குகளை ஜோதிடசாஸ்திரம் கூறியுள்ளது. ஜோதிடர்களிடம் நேரில் தெரிந்து கொள்வது நல்லது.
* நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லி வழிபடலாமா?
கே.பார்வதி, கள்ளக்குறிச்சி.
இது தவறான செயல்.செய்யக்கூடாது. கோவிலில் எந்த விக்ரகத்தையும் தொட்டு வழிபடுவது பாவம். நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமான் நடனமிடுகிறார். அதை மனதில் எண்ணி வேண்டிக் கொண்டாலே முழுபலனும் கிட்டும்.
வன்னிமரத்தை நினைத்தாலும் வழிபட்டாலும் பாவவினை தீரும் என்பது சரியா?
ஏ.எஸ்.எம்.ராஜா, பழைய வண்ணாரப்பேட்டை.
மதுரையின் பெருமையைக் கூறும் திருவிளையாடல் புராணத்தில் அக்கோவிலில் இருந்து மறைந்த வன்னி மரத்தை சுவாமி மீண்டும் தோற்றுவித்ததாக கூறப்பட்டுள்ளது. சிவன், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வன்னி இலை உகந்தது. சிறப்பாக சனிபகவானுக்கு உரியது வன்னிமரம். இதை வழிபட்டால் சனி தோஷமும், பாவமும் நீங்கும். இவ்வளவு பெருமை வாய்ந்த மரத்தை மனதால் நினைத்தால் கூட புண்ணியம் தான்.
