ADDED : மே 29, 2016 04:31 PM

* கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது என்பது ஏன்?
ஏ.வேலுசாமி, கோவை.
கோபுர நிழல் வீட்டின் மீது விழுந்தால் வம்சவிருத்தி பாதிக்கும். அதுபோல் கோபுரத்தின் நேர் எதிர்புறமும், அதன் பக்கத்தில் இருபுறமும் வீடுகட்டி குடியிருக்கக்கூடாது. ஒருகோவிலைச் சுற்றி தெய்வ சக்தி பரவியும், உட்புகுந்தும் வெளிப்பட்டும் கொண்டே இருக்கும். அதைத் தடை செய்யும் விதமாக நாம் எந்தவிதத்திலும் செயல்படக்கூடாது.
பூஜையறையில் வீணையை வைத்து வழிபடலாமா?
ஏ.பட்சிராஜன், கோடம்பாக்கம்.
இசைக்கருவிகள் எல்லாமே வழிபாட்டுக்குரியவை தான். அதிலும் வீணை சரஸ்வதி தேவியுடையது. வெறுமனே பூஜைமட்டும் செய்யாமல், கற்றுக் கொண்டு வாசித்தால் இன்னும் நன்மை ஏற்படும்.
கண் திருஷ்டி நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்?
என்.ராமச்சந்திரன், பெங்களூரு.
செவ்வாய், வெள்ளிகளில் வீட்டில் சாம்பிராணி போடுதல், பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தேங்காயில் சூடம் ஏற்றி சுற்றி உடைத்தல், வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தல், கற்றாழை கட்டுதல் போன்றவற்றை செய்யுங்கள்.
* அரசமரம், வேப்பமரத்தை எந்தக் கிழமையில் சுற்ற வேண்டும்? அதற்குரிய பலன் என்ன?
கா.ச குருசாமி, அருப்புக்கோட்டை.
திங்கட்கிழமை காலையில் வலம் வந்து வழிபட்டால் மிகச்சிறப்பு. திங்களும் அமாவாசையும் சேர்ந்த நாளில் சுற்றுவது இன்னும் சிறப்பு. இதை 'அமாசோம பிரதட்சிணம்' என்று சாஸ்திரங்கள் விசேஷமாகக் கூறுகின்றன. இரவு முழுவதும் கார்பன்டை ஆக்சைடை வெளியிடும் மரம், விடியற்காலை முதல் ஆக்சிஜனை வெளியிடும். எனவே காலையில் வலம் வந்தால் நோய்கள் நீங்கும். மனரீதியான பிரச்னைகள், கவலை நீங்கி மனம் வலிமை பெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
** பசுதானம் மிக உயர்ந்தது என்கிறார்களே! ஏன்?
எஸ். மாரிமுத்து, சிட்லபாக்கம்.
பசுதானம் மட்டுமல்ல! பசுவை பராமரிப்பதே மிக உயர்ந்த விஷயம் தான். இந்த கலியுகத்தில் பசுக்கள் குப்பை மேடுகளில் திரிகின்றன. பாலிதீன் பைகளில் போடப்படும் கழிவுகளை உண்கின்றன. இப்படி செய்வதெல்லாம் மகாபாவம். வெயில் அளவுக்கு மீறி கொளுத்துகிறது என்றால், இதுபோன்ற பாவங்களைச் செய்வதால் தான்! தாய்ப்பாலுக்கு பிறகு மனிதன் கடைசி வரை பசும்பாலையே நம்பியிருக்கிறான். இறந்த பிறகும் கூட அவனுக்கு பால் தான் ஊற்றுகிறார்கள். தாயில்லாத பிள்ளைகளுக்கு பசும்பால் தான் உயிர் காக்கும் மருந்து. இப்படிப்பட்ட அரிய உயிரினத்தை பாதுகாப்பது நம் கடமை. இதை தானம் கொடுக்கும் போது நல்ல மாடாக கொடுக்க வேண்டும். கடமைக்கு தானம் செய்தால் அதை அடிமாட்டுக்கு விற்று விடுவார்கள். இது பாவத்தை மேலும் அதிகரிக்கும்.
பசுக்களை கண்ணியமான மடங்களுக்கு தானம் செய்யுங்கள். அவர்கள் அதை இறக்கும் வரை பராமரிப்பார்கள்.
