ADDED : நவ 18, 2016 12:07 PM

** தவிர்க்க முடியாத நேரத்தில் பொய் சொல்கிறேன். மனசாட்சி உறுத்துகிறது. இதற்கு பரிகாரம் உண்டா?
ஏ.கல்யாணராமன், கள்ளக்குறிச்சி.
பிறருக்கு நன்மை அளிக்கும் என்றால் பொய் சொல்வது பாவமில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார். அதற்காக இதையே காரணமாகக் கொண்டோ அல்லது பரிகாரம் இருக்கிறதே என்று துணிந்தோ பொய் சொல்வது பாவமாகும். 'வாய்மையே வெல்லும்' என்று துணிந்து பொய் சொல்வதை நிறுத்துங்கள். இது மட்டுமே பொய் சொல்லும் பாவத்தில் இருந்து தப்பிக்க சிறந்த பரிகாரம்.
பிதுர்தோஷம் என்றால் என்ன? அதைப்போக்கும் வழிபாட்டை கூறுங்கள்.
வி.எஸ்.மணி, புதுச்சேரி.
முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளை பிதுர்க்கடன் செய்தல் என்பர். அமாவாசை தர்ப்பணம், வருஷ திதி கொடுத்தல் போன்றவை இதில் அடக்கம். இதைச் சரியாகச் செய்யாவிட்டால் பிதுர்தோஷம் என்னும் பாவம் உண்டாகும். நம்முடைய தலைமுறையில் சரியாக பிதுர்க்கடன் செய்கிறோமே... நமக்கு எப்படி இது பொருந்தும் என கேட்கலாம். முன்னோர்களில் சிலர் தர்ப்பணம் செய்யாமல் விட்டிருந்தாலும், வாரிசு இல்லாமல் இறந்த பங்காளிக்கு பிதுர்க்கடன் செய்யாமல் போனாலும் கூட இந்த தோஷம் பாதிக்கும். முதலில் ராமேஸ்வரம் அல்லது ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், அவினாசி, தென்காசி போன்ற தலங்களில் பரிகாரம் செய்ய வேண்டும். அதன்பின் அமாவாசை, மகாளய பட்சம், வருஷ திதிகளை செய்தால் சந்ததியோடு நலமாக வாழலாம்.
* வேதனையின்றி உயிர் பிரிய என்ன வழிபாடு மேற்கொள்ளலாம்?
த.நா.வாசுதேவன், எமனேஸ்வரம்.
அடியவர்கள் பலர், எல்லா தெய்வங்களிடமும் வேதனையின்றி உயிர் பிரிய வரம் வேண்டி பாடியிருக்கிறார்கள். சிவ பூஜையின் முடிவில் உள்ள ஒரு பிரார்த்தனை ஸ்லோகம் இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
'அநாயாஸேன மரணம் விநா தைன்யேன ஜீவனம்|
க்ருபயா தேஹி மே சம்போ த்வயி பக்தி: அசஞ்சலம்||'
இதன் பொருள், ''எந்தக் கஷ்டமும் இல்லாமல் அநாயாசமாக உயிர் பிரிய வேண்டும். யாரிடமும் அடிபணிந்து நிற்காத வாழ்வு வேண்டும். உயிருள்ளவரை உன்னிடத்தில் அசையா பக்தி வேண்டும். இதைக் கருணை கூர்ந்து அருள வேண்டும் என்பதாகும். இந்த மந்திரத்தையோ, இதன் பொருளையோ தினமும் சொல்வது நல்லது. 'த்ரயம்பகம் யஜா மஹே' எனும் மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம். இதன் மூலம் பயமில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
பசுவதை செய்பவர்களை திருத்த வழி இருக்கிறதா?
ஆ.கண்ணதாசன், வளசரவாக்கம்.
பசுவதை செய்வதை கொடிய பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழும் காலத்திலேயே அவர்களும், அவர்களது சந்ததிகளும் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பசுவதை நடக்கும் நாட்டிற்கு தோஷம் உண்டாகும். கோஹத்தி பாவம்' என்று இதற்குப் பெயர். இதைச் செய்யக்கூடாது என்று சொல்லியும் திருந்தாதவர்களை, நாட்டின் நலனை முன்னிட்டு தண்டித்து திருத்த வேண்டியது அரசின் கடமை.
* பூச்செடியில் இருந்து உதிர்ந்த பூக்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?
தி.சிந்தன், விருதுநகர்.
பவளமல்லி பூக்களை மட்டும் மரத்திலிருந்து உதிர்ந்த பின்னும் பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்றதைப் பறித்து தான் பயன்படுத்த வேண்டும்.
