ADDED : ஆக 22, 2017 09:35 AM

* பெண்களை தீர்க்காயுளுடன் வாழ வாழ்த்தலாமா?
எஸ்.கோவிந்தராஜன், கோயம்புத்தூர்.
உலகில் எல்லா உயிர்களுமே விரும்புவது நீண்ட ஆயுளைத்தான். இதில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கு! நீண்டஆயுளுடன், தீர்க்க சுமங்கலிகளாக வாழ மனதார வாழ்த்தலாம்.
கந்தசஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?
ஆ.சுவாமிநாதன். மணியக்காரன்பாளையம்.
முருகனின் ஸ்தோத்திரங்களில் உயர்ந்ததாக போற்றப்படுவது சஷ்டி கவசம். கவசம் என்றால் பாதுகாப்பு. சஷ்டி திதியன்று விரதமிருந்து பாராயணம் செய்பவர்களுக்கு நோய், திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்கும்.
* நல்ல மனிதனாக வாழ எனக்கு ஆசை. இதற்கு வழிகாட்டுவீர்களா?
எஸ்.சுப்பிரமணி, மதுரை.
இந்த எண்ணம் வந்ததே உங்களிடம் உள்ள ஆணவம் நீங்கி, நல்ல மனிதனாக வாழத்துவங்கிவிட்டீர்கள் என்பதை காட்டுகிறது. அறிகுறி தான். தினமும் கோயிலுக்கு செல்லுங்கள். கடவுளை முழுமையாக நம்புங்கள். பிறகு எல்லோருமே உறவுகளாகத் தான் தெரிவார்கள்.
கூட்டு பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்... ஏன்?
வி.கருணாநிதி, நெய்வேலி.
தன் பிள்ளைகளின் ஒற்றுமையை நினைத்து கடவுள் மகிழ்வார். கேட்டதை தருவார். பலரும் ஒன்றுகூடி பிரார்த்தித்தால், நடக்காது என நினைத்தது கூட இறையருளால் நடக்கும்.
தர்ப்பணம் செய்யும் நாள் தவறி விட்டது. பரிகாரம் உண்டா?
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
கிடையாது. தர்ப்பணம், திதி போன்றவற்றை அதற்குரிய நாளில் செய்தாக வேண்டும். முன்னோரை திருப்தி செய்வதை விட அடுத்த தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என்பது முக்கியம். மகாளய பட்சம் செப்.6 முதல் 19 வரை உள்ளது. இந்த நாட்களில் தவறாமல் தர்ப்பணம் செய்யவும்.
