
வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
* நமக்குத் துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறோம். அந்த விதியை எப்படித்தான் தடுப்பது? ஆர்.கதிரேசன், விருதுநகர்.
துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா? இதற்காகத்தான் எப்பொழுதும் 'எல்லாம் இறைவன் செயல்' என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் கூட மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். வாரியார் சுவாமிகள், ''விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக் கொள்ள தெய்வ வழிபாடு எனும் குடையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்று எளிமையாகக் கூறியுள்ளார்.
** பலவிதமான பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொன்றைப் பின்பற்றி வருகின்றனர். சரியான பஞ்சாங்கம் எது என்பதற்கான விளக்கம் தரவும். ஆர்.பாரதிகண்ணன்,
சென்னைஇன்றைக்குப் பஞ்சாங்கங்கள் பல வெளிவருகின்றன. எத்தனை வந்தாலும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவை இரண்டு விஷயங்கள் தான். ஒன்று வாக்கியம். மற்றொன்று திருக்கணிதம். வாக்கியம் என்பது இப்படித்தான் எதிர்காலம் இருக்கும் என்று முனிவர்களால் அறுதியிட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும் சாஸ்திரம். திருக்கணிதம் என்பது நடப்புக் காலத்தில் சூரியன் உதயமாவது, சந்திரன் உதயமாவது, பூமியின் சுழற்சி, நட்சத்திரங்களின் நிலை ஆகியவற்றை அதாவது கண்ணுக்குத் தெரிவதை வைத்து அப்போதைக்கப்போது காலத்தைக் கணிப்பது. திருக்கணிதம் என்று சொல்லக்கூடாது.
த்ருக்+கணிதம். 'த்ருக்' என்றால் 'நேரில் காண்பது'. 'கணிதம்' என்றால் கணிப்பது. 'த்ருக்கணிதம்' என்ற சொல்லே மருவி திருக்கணிதமாயிற்று.ஏன் இந்த வேறுபாடு ஏற்பட்டது என்று கேட்கலாம்.
சூரியன், சந்திரன் உட்பட அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் ஒரே மாதிரியாகவே சுழன்றும் சஞ்சரித்தும் கொண்டிருக்கின்றன. இவற்றைப் பலகாலம் தவம் செய்து ஞான திருஷ்டியால் அறிந்த முனிவர்கள் சூரியனும் சந்திரனும் நேர் எதிர் கோட்டில் சஞ்சரித்தால் பவுர்ணமி, இருவரும் ஒன்றிணைந்தால் அமாவாசை என்றும், ஒரு கட்டத்தில் இவர்களின் சுற்றுப்பாதையில் இடையில் வேறு கிரகங்கள்- உதாரணமாக பூமி குறுக்கிட்டு அதன் நிழல் சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் பொழுது கிரகணம் என்பது போன்ற அற்புதமான விஷயங்களை இன்னும் எதிர்வரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும், நம்போன்றோர் சிரமம் இல்லாமல் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக ஓலைச் சுவடிகளில் வடமொழி வாக்கியங்களாகப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். இதனை ஆதாரமாகக் கொண்டே 'வாக்கியப் பஞ்சாங்கம்' என்பது கணக்கிடப்படுகிறது. பின்னாளில் வந்த சில முனிவர்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சஞ்சாரங்கள் வாக்கியத்தில் உள்ளதிற்கு ஒரு சில வினாடிகள் மாறுபடுவதாக ஆராய்ந்து அப்போதைக்கு அப்போது தெரியும் நட்சத்திர கிரக நிலைகளைக் கொண்டு கணித்துக் கொள்ள வேண்டும் என சில விதிமுறை மாற்றங்களை எழுதி வைத்தார்கள். நேரில் கண்டு கணிக்க வேண்டும் என்பதனால் 'த்ருக்-கணிதம்' எனப் பெயர் பெற்றது.இரண்டைப் பொறுத்த வரையிலும் நட்சத்திர நிர்ணயங்களிலும் விசேஷ தினங்கள் நிர்ணயங்களிலும் ஒரு சில மாறுபாடுகள் வருகிறதே தவிர மற்றயபடி அமாவாசை, கிரகணம் போன்றவற்றில் ஒற்றுமையே காணப்படுகிறது.வாக்கியப் பஞ்சாங் கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒரு சில விஷயங்களை திருக்கணிதப் படியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தை கடைபிடிப்பவர்கள் ஒரு சில விஷயங்களை வாக்கியத்தை அனுசரித்துக் கொள்வதும் தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. உங்கள் பகுதியில் எந்தப் பஞ்சாங்கம் அனுஷ்டிக்கப்படுகிறதோ (வாக்கியம் அல்லது திருக்கணிதம்) அதையே நீங்களும் கடைப்பிடியுங்கள். சந்தேகம் வரும் சமயங்களில் பெரியவர்களைக் கலந்து கொள்ளுங்கள். சரியான சமயத்தில் சரியான கேள்வி கேட்டதற்கு பாராட்டுக்கள்.