ADDED : செப் 24, 2010 12:36 PM

பழிப்புஇல் நின் பாதம் பழம்தொழும்பு
எய்தி விழப் பழித்து
விழித்து இருந்தேனை விடுதி கண்டாய்!
வெண் மணிப் பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி
நுந்தும் பந்தப் பெருமை
தழிச்சிறை நீரில் பிறைக்கலம்
சேர்தரு தாரவனே!
பொருள்: சிவபெருமானே! முத்து, சங்கு, மந்தாரமலர் ஆகியவற்றை அடித்துக் கொண்டு, கங்கை நதி வருகின்றது. அக்கங்கை நீரைத் தேக்கி வைக்கும் அணைபோல, உன்
ஜடாமுடி இருக்கின்றது. அந்த அணையில் மிதக்கும் படகு போல இளம்பிறை விளங்குகின்றது. வெற்றி மாலையை அணிந்தவரே! குற்றமற்ற உன் திருவடிகளை வழி
வழியாக பின்பற்றும் முறைப்படி பணிந்து போற்றினேன். பாதியில் அப்படியே மறந்துவிட்டு பழித்துரைக்கத் தொடங்கி, விழித்துக் கொண்டு நிற்கின்றேன். அப்படிப்பட்ட அற்பன் தான் நான்! இருப்பினும், என்னை அப்படியே விட்டுவிட்டாயே!
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார் - பாடல் - 208
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம்இல் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதில்சூழ்
சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
பொருள்: ஊழிக் காலத்திலும் அழியாமல் இருக்கும் குறுங்குடியில் வீற்றிருப்பவனே!
திருவெள்ளறையில் வாழ்பவனே! மதில் சூழ்ந்த திருமாலிருஞ்சோலைக்கு அதிபதியே! திருகண்ணபுரத்தில் இருக்கும் அமுதமே! என் துன்பங்களைக் களைவாயாக.
உன்னை இடுப்பில் வைத்துக் கொண்டு தம் இல்லங்களில் கொண்டாடும் கோபியர்கள் அனைவரும் மகிழும்படியாகவும், உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் குளிரும்படியாகவும், கற்றவர்கள் உன் மீது கவிபாடும் படியாகவும் செங்கீரை ஆடுவாயாக. ஏழு உலகங்களுக்கும் தலைவனே! ஆடுவாயாக.