ADDED : டிச 22, 2017 10:23 AM

* சனி பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்பது ஏன்?
கு. கோப்பெருந்தேவி சென்னை.
நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என ஐந்து வகை பிரதோஷங்கள் உண்டு. தினமும் மாலை நாலரை முதல் ஆறுமணி வரையிலான நேரம் நித்ய பிரதோஷம். இந்நேரத்தில் சிவபெருமான் ஆனந்தநடனமாடி, களைப்புற்றிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் அமைதிப்படுத்துவார். இதுவே வளர்பிறை திரயோதசியுடன் கூடினால் பட்ச பிரதோஷம். தேய்பிறை திரயோதசியானால் மாத பிரதோஷம் என்பர். தேய்பிறை, சனிக்கிழமை மற்றும் திரயோதசி மூன்றும் இணைந்தால் மகா பிரதோஷம் என கூறுவர். மகா பிரதோஷ நாளில் தான் பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டு சிவபெருமான் உலகை காப்பாற்றினார். அந்த வேளையில் நந்திகேஸ்வரரின் மயக்கம் நீங்க, காப்பு அரிசி கொடுக்கப்பட்டது. எனவே இது விசேஷமானது.
வீட்டில் விளக்கேற்றினால் சுவாமிக்கு நைவேத்தியம் கட்டாயம் செய்யணுமா?
சி.வி.நடராஜன்,சிதம்பரம்.
சுவாமிக்கு விளக்கேற்றுவது பூஜையின் துவக்கமே. பூஜையின் முக்கிய அங்கம் நைவேத்தியம் என்பதால் அவசியம் செய்யுங்கள்.
அம்மன் சன்னதியில் இருக்கும் சண்டிகேஸ்வரி யார்?
என்.ஜே.ரவி விக்னேஷ், திருப்பூர்.
சண்டிகேசர், சண்டிகேஸ்வரி என்ற பெயர்களில் எல்லா சுவாமிகளுக்கும் பூஜையை நிறைவு செய்யும் தெய்வங்கள் உள்ளனர். ஆண் தெய்வங்களுக்கு சண்டிகேசர் என்றும், பெண் தெய்வங்களுக்கு சண்டிகேஸ்வரி என்றும் பெயர். சண்டிகேசரை வணங்குவது போல், சண்டிகேஸ்வரியையும் வழிபடலாம்.
* பசுஞ்சாணம் கலந்த நீரால், வாசல் தெளிப்பதன் சிறப்பு என்ன?
எஸ்.நஞ்சுண்டன், ஊட்டி
பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினி. தெய்வ சக்தியும் மங்களமும் இணைந்தது. வாசலில் தெளிப்பதால் தொற்றுநோய் வராமல் பாதுகாப்பதுடன் வீட்டையும் சுபிட்சமாக்கும்.
சுவாமி இல்லாத அரசமரத்தை சுற்றி வந்தால் பலனுண்டா?
ஆர்.சாந்தாராமன், சென்னை
மருத்துவ ரீதியாக, சுற்றுவது உடலுக்கு நல்லது. சுவாமியுடன் கூடிய அரசமரத்தைச் சுற்றினால் பலன் கூடும்.
