ADDED : ஜன 09, 2018 09:34 AM

வயதில் சிறிய துறவிகளை பெரியவர்கள் வணங்குவது சரியா?
என்.ஜே.கீர்த்தி, திருப்பூர்
உலக வாழ்க்கையை விட்டு, சொந்தபந்தங்கள் என்றில்லாமல், உயிர்களின் நலனுக்காக தவ வாழ்க்கை மேற்கொண்டவர்கள் துறவிகள். இவர்களை வணங்க, வயது வித்தியாசம் பார்க்க வேண்டாம்.
குழந்தைக்கு சோறு ஊட்டும் வைபவத்தை கோயிலில் தான் நடத்த வேண்டுமா?
அண்ணா அன்பழகன், சென்னை
வீட்டிலேயே நடத்தலாம். கோயிலில் நடத்துவதாக வேண்டுதல் இருந்தால் நடத்துங்கள்.
குலதெய்வம் தவிர மற்ற தெய்வங்களை வணங்காமல் இருக்கலாமா?
எஸ்.கண்ணன், மதுரை
பல தெய்வ வழிபாடு என்ற தனிச்சிறப்புடையது இந்துமதம். குலதெய்வ வழிபாட்டுடன், மற்ற தெய்வ வழிபாடுகளையும் செய்யவேண்டும். குலதெய்வ வழிபாடு நம் தனிப்பட்ட குடும்பத்தையும் வம்சத்தையும் காப்பதற்காக செய்யப்படுவது. பிற தெய்வ வழிபாடு இப்பிறவிக்கு புண்ணியத்தை தருவது.
* கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது எதற்காக?
ஏ.பட்சிராஜன், கோடம்பாக்கம்.
உப்பு, மிளகை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு செலுத்த வேண்டும். அதற்கென தனிப்பெட்டிகள் வைத்திருப்பர். குளத்தில் கரைப்பது தவறான செயல்.
பிரதோஷத்தில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசிப்பது ஏன்?
வி.ராமசாமி, சென்னை
சிவபெருமான் தினமும் மாலை நேரத்தில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடனம் புரிகிறார். பகலில் அல்லல்படும் உயிர்களின் மனச்சோர்வு நீங்கவும், இரவு நிம்மதியாக உறங்கவும் இப்படிச் செய்கிறார். அந்த வேளையில் அவரை வழிபட்டால் கவலைகள் நீங்கும். பிரதோஷத்தன்று மாலையில் வழிபடுவது இன்னும் சிறப்பு.
* மாதப்பிறப்பன்று புத்தாடை அணியலாமா?
என்.வி.காந்தன், சென்னை
கூடாது... மாதப்பிறப்பு ஒரு புண்ணியகாலமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்று தீபாவளி, குடும்ப சுபநிகழ்ச்சி போன்று ஏதாவது விழா என்றால் அணியலாம்.
