ADDED : ஜன 17, 2018 03:36 PM

* மலைகளுக்கு ஆன்மிக சக்தி அதிகம் இருப்பது ஏன்?
ஆ.சுவாமிநாதன், மணியக்காரன்பாளையம்
தேவர்கள் விரும்பும் இடமான மலை, தெய்வத்தன்மை மிக்கது என மகாகவி காளிதாசர் குறிப்பிடுகிறார். ஞானம் அளிக்கும் சக்தி உள்ளதால், மலையில் தவமிருந்த முனிவர்கள் ஆன்மிக ஞானம் பெற்று மக்களுக்கு வழிகாட்டினர். சிவனுக்கு 'கிரீசன், கிரிசன்' என்ற பெயருண்டு. 'கிரீசன்' என்றால் 'மலையின் கடவுள்' எனவும், 'கிரிசன்' என்றால் 'மலைகளில் உறங்குபவன்' என்றும் பொருள். இதனடிப்படையில், நம் முன்னோர் கிரிவலம் செய்து மலையை வழிபட்டனர்.
* லட்சார்ச்சனை என்பதன் பொருள் என்ன?
ச.குருசாமி, அருப்புக்கோட்டை
இறைவனது திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லி செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நுாறு முறை சொல்லி அர்ச்சித்தால் ஒரு லட்சம் கணக்கு வரும். இதுவே 'லட்சார்ச்சனை' எனப்படுகிறது. ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் சொல்லி அர்ச்சித்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும்.
கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கும், மற்ற கோபுரங்களுக்கும் வித்தியாசம் உண்டா?
ம.வாசுதேவன், கோவை
'ஆலயம் புருஷாகாரம்' என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கோயிலை மனித வடிவாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கருவறை - தலை; மகாமண்டபம் - மார்பு; பிரதான ராஜகோபுரம் - திருவடிகள். திருவடி தரிசனமே மிக உயர்ந்தது என்பதால் 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என சொல்கிறோம். எனவே ராஜகோபுரம் என்பது தனிநிலை. மற்ற வாசல்களில் உள்ள கோபுரங்கள் கோயிலின் அமைப்பை பொறுத்து அமையும். இவைகளுக்கும் தனித்தனி சிறப்பு இருந்தாலும், எல்லாக்கோயில்களிலும் இவை இருப்பதில்லை.
உயிர் பறிக்கும் எமனை 'எமதர்மன்' என்பது ஏன்?
ஏ.கல்யாணராமன், விழுப்புரம்
ஒவ்வொரு தேவருக்கும் ஒரு கடமை உண்டு. அது அவரவருக்குரிய தர்மம். உயிர் பறிப்பதால் 'கொலைகாரர்' என கருத கூடாது. பிறக்கும் முன்பே ஒருவரின் ஆயுட்காலம், இறக்கும் சூழ்நிலை தீர்மானிக்கப்பட்டு விடும். இதனை நேர்த்தியுடன் மனம் கலங்காமல் ஏற்பது நம் கடமை. தர்ம சாஸ்திரங்களில், எமதர்மன் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை.
வாழைப்பழம் இரட்டையாக இருந்தால் சாப்பிடுவதில்லையே ஏன்?
எஸ்.சுப்புலட்சுமி, பசுவந்தனை
சாப்பிடுவதில் தவறில்லை.சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. இயற்கைக்கு மாறானதை சாஸ்திரங்கள் ஏற்பதில்லை.
