ADDED : பிப் 02, 2018 01:45 PM

* மணமக்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்வது கட்டாயமா?
ரா.கீதாஞ்சலி, திருக்கோவிலுார்.
மணமகனை சைவர்கள் சிவனாகவும், வைணவர்கள் விஷ்ணுவாகவும் கருத வேண்டும். மணமகளின் பெற்றோர் தங்களின் மகளை, பார்வதி அல்லது லட்சுமியாக கருதி தாரை வார்த்து கொடுக்க வேண்டும். அப்போது மணமகளின் தந்தை, மணமகனுக்கு பாத பூஜை செய்வது வழக்கில் உள்ளது. பெற்றோருக்கு பாத பூஜை செய்வது இடைக்காலத்தில் ஏற்பட்டது.
* கலி முற்றி விட்டதாக சொல்கிறார்களே...உண்மையா?
ராதாகிருஷ்ணன், கவுரிவாக்கம்.
கலியின் தாக்கத்தை உணர, தர்ம சாஸ்திரம் கூறுவதை கேளுங்கள்.
1.மக்கள் தமது குலதர்மம், கடமையை புறக்கணிப்பர்.
2. நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாவர்.
3. பருவம் தவறி மழை பெய்வதோடு இயற்கை சீற்றம் அதிகரிக்கும்.
4. ஆறு, குளங்கள் வறண்டு போகும்.
இதை ஒப்பிட்டு பார்த்து நீங்களே கலி முற்றியதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
சந்திராஷ்டம தினத்தில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம் சொல்லுங்கள்.
எஸ்.கார்த்திகா, கோவை.
நம் ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் இருப்பது சந்திராஷ்டமம். இந்நாளில் மனதில் படபடப்பு, முன்கோபம், மனத்தாங்கல் உண்டாகலாம். மவுனம் காப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட பிரச்னை மறையும்.
வாழ்நாள் வேகமாக ஓடுகிறதே... மனதில் ஆன்மிக சிந்தனையை வளர்ப்பது எப்படி?
கா. சரவணராஜ், வெண்கரும்பூர்.
எவ்வளவு வேகமாக ஓடினாலும், அன்றாட பணிகளை செய்ய, பணம் சம்பாதிக்க யாரும் தவறுவதில்லை. ஆனால் மனதிற்கு அமைதி தருவது ஆன்மிகம் என்பது புரிந்தால் போதும். அதற்கான நேரம் கிடைத்து விடும்.
குடும்ப பிரச்னை தீர, கணபதி ஹோமம் செய்தால் தீர்வு கிடைக்குமா?
எஸ்.எல்.பிச்சைமுத்து, சிங்கப்பெருமாள் கோவில்.
கணபதி ஹோமம் செய்தால் குடும்ப பிரச்னை தீரும். மேலும் கணவன், மனைவிக்குள் சின்ன விஷயங்களை பெரிதுபடுத்துவதோ, ஒருவர் இல்லாத நேரத்தில் புறம் பேசுவதோ கூடாது. ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசுவதும் அவசியம்.
