
* பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவது அவசியமா?
கி.ரவிக்குமார், நெய்வேலி
பெண் பூப்படைதல் என்பது குழந்தை பிறப்பது போல புனிதமானது. அதனால், பூப்புனித நீராட்டு விழாவை ஆடம்பரமாக இல்லாமல் உறவினர்களோடு வீட்டிலேயே நடத்தலாம்.
மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் பொருள் என்ன?
ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்
மனதின் செயல்பாட்டால் நம் வாழ்வு அமைகிறது. மிருகமாக தாழ்த்துவதும், தெய்வமாக உயர்த்துவதும் அவரவர் மனமே. பேராசை, கோபம், பொறாமை போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் மிருகங்களாக கருதப்படுகின்றனர். அன்பு வழியில் மனைவி, மக்களுடன் வாழ்பவர்களையும் பிறர் நலனுக்காக வாழ்பவர்களையும் உலகம் தெய்வமாக போற்றுகிறது. மனதை செம்மைப்படுத்தினால் தெய்வமாக உயர்வான் மனிதன்.
மோட்ச தீப வழிபாடு என்பது என்ன?
ஏ.பட்சிராஜன், கோடம்பாக்கம்
இறந்தவரின் ஆன்மா நரகத்தில் துன்பப்படாமல் கடவுளின் திருவடியை அடைந்து பேரின்பம் பெற வேண்டும் என்பதால் மோட்ச தீபம் ஏற்றுகிறோம்.
முன்னோர் படங்கள் தெற்கு நோக்கி தான் இருக்க வேண்டுமா?
ஏ.ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்துார்
கட்டாயமில்லை. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.
* பணம் வைக்கும் பீரோவை எத்திசை நோக்கி வைக்க வேண்டும்?
எஸ்.மணிமேகலை, சென்னை
வீட்டின் தென்மேற்கு(கன்னி) மூலையில் வடக்கு நோக்கி பணப்பெட்டி, பீரோவை வைப்பது சிறப்பு.
அதிகாலையில் நல்ல கனவு வந்தால் அப்படியே விழித்திருந்தால் நல்லதாமே...
எஸ்.ஷியாம் சுந்தர், கோவை
கனவால் எதையும் சாதிக்க முடியாது. முயற்சியில் ஈடுபடுவது அவசியம். கனவு காணுங்கள். அது நனவாக அயராது பாடுபட்டால் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
விளக்கில் எண்ணெய் தீர்ந்து, திரி எரிந்தால் அபசகுனமா?
என்.சொக்கலிங்கம், திருச்சுழி
இல்லை. பூஜை முடிந்த பின்னும் விளக்கின் திரியை துாண்ட, எண்ணெய் விட மறக்க வேண்டாம். அவசர வேலை இருந்தால், பூவால் அமர்த்துவது அவசியம்.
சிவன் கோயில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?
எல்.பரிமளா, திருப்பூர்
சிற்ப சாஸ்திரப்படி, கோயில் சுவரில் சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடன், அம்மனுக்கு சிங்கம் இருக்க வேண்டும். தொலைவில் இருந்தே எந்த தெய்வத்தின் கோயில் என்பதை உணர்த்தும் மங்களச் சின்னமாக இது விளங்குகிறது.

