ADDED : ஜூன் 14, 2019 02:28 PM

மனக்கவலையை தீர்க்கும் மந்திரம் எது?
ஆர்.அகிலா, போத்தனுார்
''சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே!
சரண்யே திரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!!''
என்ற ஸ்லோகத்தை தினமும் ஜபியுங்கள். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று சிவன் கோயில்களில் உள்ள அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
* காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதன் நோக்கம் என்ன?
என். பிரகதா, மதுரை
விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், மணிக்கட்டில் பார்வதியும் சூட்சும வடிவில் உள்ளனர். காலையில் விழித்ததும் உள்ளங்கையை பார்த்தால் மூன்று தேவியரின் அருளால் நன்மை சேரும்.
கொடிமரத்தை தவிர மற்ற தெய்வத்தின் முன் விழுந்து வணங்கலாமா?
கே.ஆர்.உதயகுமார், சென்னை
கோயிலில் உள்ள எல்லா தெய்வத்தையும் வழிபட்ட பின்னர், எல்லா சன்னதிக்கும் சேர்த்து கொடி மரத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதே சரியான முறை.
* ஸ்ரீராமஜெயம் எழுதுவதால் என்ன பலன் ஏற்படும்? எத்தனை முறை எழுத வேண்டும்?
வி.வசந்தி, பீடம்பள்ளி
மனதால் நினைத்தாலே பாவம் போக்கும் சக்தி ராம நாமத்திற்கு உண்டு. ஜபித்தால் வெற்றி கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். மனதில் அமைதியும், நிம்மதியும் குடியிருக்கும். 108 முறை தினமும் ராம நாமத்தை எழுதினால் பிணி நீங்கி மோட்சம் கிடைக்கும்.

