
* விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா?
எஸ்.லாஷிகா, பெங்களூரு
கூடாது. இது தவறான வழக்கம்.
வீட்டில் உக்கிரவடிவ காளியை வழிபடலாமா?
என்.கேசவ், திருப்பூர்
உக்கிர வடிவ காளியை வீட்டில் வழிபட சாஸ்திரங்கள் வழிகாட்டவில்லை. கோயிலில் வழிபட வேண்டிய தெய்வமாகவே வைத்துள்ளனர். 'ஓம் காளி ஜெய் காளி' என்ற மந்திரம் ஜபித்து மானசீகமாக வீட்டில் வழிபடுங்கள்.
இரவில் பூப்பறித்து காலையில் பூஜிக்கலாமா?
என்.யாழினி, சிவகங்கை
பூப்பறித்தல், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தல் போன்றவற்றை சூரியன் உதயமான பிறகே செய்ய வேண்டும்.
* முருகனின் அறுபடை வீடுகளுக்கு வரிசைப்படி செல்ல வேண்டுமா?
வி.தேவ் சரண், கடலுார்
இது கட்டாயம் இல்லை. அவரவர் இஷ்டம் போல செல்லலாம்.
சர்க்கரை நோய் இருப்பதால் விரதமிருக்க முடியவில்லை. என்ன செய்வது?
பி.கவுதம், திருத்தணி
நோயாளிகளுக்கு விரதங்களும், கடுமையான நியமங்களும் தேவையில்லை என சாஸ்திரம் கூறுகிறது. எனவே கவலை இல்லாமல் முடிந்த வரை வீட்டில் பூஜை செய்யுங்கள். வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்லுங்கள். விரத பலன் கிடைப்பதோடு உடல்நலம் மேம்படும்.
* நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் செல்லலாமா?
ஆர்.ஹரிதா, ராமநாதபுரம்
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டு. வாகனத்திலாவது கிரிவலம் செய்ய நினைப்பதே பெரிய விஷயம் தான்!
கற்றாழைச் செடியை வாசலில் கட்டுவது ஏன்?
பி.எம்.அர்னேஷ், ஊட்டி
திருஷ்டி போக்கும் பரிகாரம் இது. விஷப்பூச்சிகள் வர விடாமல் தடுக்கும். கற்றாழை மீது பட்டு வரும் காற்று வேப்பமரக் காற்று போல நன்மையளிக்கும்.
* உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன?
டி.ஹரிணி, சென்னை
கோயிலைத் துாய்மைப் படுத்துவது உழவாரப்பணி. இதற்கான கருவிக்கு 'உழவாரப் படை' என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர். சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதை விட மேலான புண்ணியத்தை இப்பணி தரும்.
எதிர்கால பலன் அறிய சிறந்த வழி ஜோதிடமா, குறி கேட்பதா?
வி.தனிஷ்கா,கள்ளக்குறிச்சி
இவை எல்லாவற்றையும் விட கடவுளே நமக்கு சிறந்த நண்பன். அவனிடம் நம் எதிர்காலத்தை ஒப்படைத்து விடலாம்.