
* அதிகாலையில் கண்ட நல்ல கனவு பலிப்பது எப்போது?
பி.அட்சயா, மதுரை
அப்படி நடந்து விட்டால் உழைப்பே இல்லாமல் பலர் கோடீஸ்வரர் ஆகியிருப்பார்கள். ஆழ்மனதின் பதிவில் உள்ள எண்ணங்களே கனவு! கனவு நனவாக இன்றுமுதல் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்குங்கள்.
* அரசு வேலை பெற பரிகாரம் சொல்லுங்கள்?
டி.வினோதா, திருவள்ளூர்
தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள். அவ்வையார் பாடிய விநாயகர் அகவல் அல்லது காசிபர் பாடிய காரிய சித்தி மாலையை தினமும் பாடுங்கள்.
* கோயிலுக்கு சென்றுதான் நேர்த்திக்கடனை வைக்க வேண்டுமா?
எல்.அபினவ், திருப்பூர்
கோயிலுக்கு சென்று வேண்டுவது நல்லது. அவசரம், உடல் நலமின்மை போன்ற சூழ்நிலைகளால் செல்ல முடியாவிட்டால் இருந்த இடத்திலேயே கடவுளை நினைத்து நேர்ந்து கொள்ளலாம்.
திருவிழா நடக்காவிட்டால் தெய்வகுற்றம் நேருமா?
எம்.லலித்,ஊட்டி
தவிர்க்க முடியாத சூழலில் திருவிழா நடைபெறாவிட்டால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையாகச் செய்தால் தெய்வகுற்றம் ஏற்படாது.
* மனதால்கூட நான் தீங்கு நினைப்பதில்லை. எனினும் வாழ்வில் முன்னேறவில்லையே...
வி.வினிதா,விழுப்புரம்
பிறருக்குத் தீங்கு நினைப்பதற்கும், முன்னேற்றத்துக்கும் தொடர்பில்லை! முன்னேற வேண்டும் என்ற எண்ணம், அதற்கான தகுதி, விடாமுயற்சி என மூன்றும் இணைந்தால் இந்த உலகமே உங்கள் கைகளில் இருக்கும்.
வன்னி மரத்தின் சிறப்பைச் சொல்லுங்கள்?
கே.பிரதாப், புதுச்சேரி
அடியவருக்காக வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடலை சிவன் மதுரையில் நிகழ்த்தியுள்ளார். விநாயகர், சிவனுக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சனீஸ்வரருக்கு உரிய மரம் வன்னி. இதை வலம் வந்தால் சனிதோஷம், பாவம் தீரும்.
கோயிலில் கடைசியாக விநாயகரை வழிபட்டால் புண்ணியம் போய்விடுமாமே...
பி.அஜித், சிவகங்கை
விநாயகரை எப்போது வழிபட்டாலும் புண்ணியம் சேரும்.
திருப்பதிக்கு செல்பவர்கள் எத்தனை நாள் விரதமிருக்க வேண்டும்?
சி.சந்தோஷி,திருத்தணி
சபரிமலை, பழநி மலைக்குச் செல்லும் முன் விரதமிருந்து செல்வது அவசியம். மற்ற திருத்தலங்களுக்கு சைவ உணவு சாப்பிட்டால் போதுமானது.