
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
* மூன்று தலை முறையாக பெருமாள் கோயிலை வழிபடாமல் விட்டுவிட்டோம். இப்போது குழந்தைகளுக்கு முதல் முடி ஏழுமலையானுக்கே எடுத்து வருகிறோம். இனிமேல் பரம்பரை பெருமாள் கோயிலிலேயே வழிபாடு செய்யலாமா? எஸ்.திருமலை, மதுரை
முதல் முடி எடுப்பது என்பது வேறு. வழிபாடு என்பது வேறு. மூன்று தலைமுறையாக பரம்பரை பெருமாள் கோயிலை வழிபடாமல் இருந்தது தவறு தான். நாள் நட்சத்திரம் பார்க்காமல் உடனே சென்று வழிபாட்டைத் துவக்குங்கள். ராமநாம ஜபத்தை நூறு தடவை எல்லோருமாகச் சொல்லி பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால், முதல் முடி எடுப்பது பற்றிய விஷயத்தில் உங்கள் முன்னோர் என்ன செய்து வந்தார்களோ அதையே நீங்களும் தொடரவும்.
* கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா? டி. ஜோதிபாய், காஞ்சிபுரம்.
ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான்
ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.
* சிவதீட்சை பெறுவது எப்படி? அதற்குரிய தகுதி என்ன? என்.சேதுராம சுப்ரமண்யம், மடிப்பாக்கம்
தீட்சை என்றால் 'அறியாமையைப் போக்கி நல்லறிவைத் தருவது' என்று பொருள். இன்பமாய் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமே நல்ல அறிவு தான். ஆனால், தீய பழக்க வழக்கம் கொண்டவர்கள், தீமை புரிபவர்கள் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது. இவர்களுக்கு இறையருளும் கிட்டாது. இவர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் அறியாமை தான். படிப்பினாலோ, வயதினாலோ, செல்வத்தினாலோ இந்த 'அறியாமை' இருளைப் போக்க இயலாது. நல்ல குருநாதரிடம் உபதேசம் பெற்று இறைவழிபாடு செய்பவர்களுக்கு மாத்திரமே அறியாமை நீங்கி, நல்லறிவும் இறையருளும் கிடைக்கும். இதற்குப் பெயர் தான் தீட்சை பெறுதல். தீய பழக்கங்களை விடுதல், தீய செயல்களைச் செய்யாதிருத்தல் ஆகியன தீட்சை பெறுவதற்கு அடிப்படைத் தகுதிகள். நிலையான இன்பமும் முழுமையான
இறையருளும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலான தகுதி.
**ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா? சி.தட்சிணாமூர்த்தி, சிதம்பரம்
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தனியார் நிர்வாகம் என எல்லாமே ஆங்கில மாதக் கணக்குப்படிதானே செயல்படுகிறது! எனவே ஆங்கில வருடம் என்பது இன்றைய காலத்தில் உலகளாவிய மக்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. அவரவர் மதசமய சம்பிரதாயப்படி ஆண்டுகள் பலவாக பிரிந்திருந்தாலும், புத்தாண்டு தினத்தை வெவ்வேறாகக் கொண்டாடினாலும் பொது நிர்வாகம் என்பது ஆங்கில வருடம் தானே! அதன் துவக்க தினத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தினால் எல்லோருக்கும் நன்மை தான். உற்சவ காலங்களிலும், வழிபாட்டு தினங்களிலும் இரவு அர்த்தயாம பூஜை தாமதமாகச் செய்யப்படுவது சாஸ்திர சம்மதம் தான்.