
இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருப்பாவை
நாலாயிர திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். அவர் பாடிய
பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை. திருப்பாவை மார்கழி பாவைநோன்பிற்காகப் பாடப்பட்டது. முப்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும் (கண்ணன் வசித்த கோகுலம்), தன் தோழியரை ஆயர் குலச்சிறுமிகளாகவும், தான் வழிபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலை நந்தகோபன் வாழ்ந்த அரண்மனையாகவும் கருதி இந்தப் பாடல்களைப் பாடினாள். திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ''ஏலோர் எம்பாவாய்'' என்று அமைந்திருக்கும். இதற்கு 'அன்பிற்குரிய தோழியே' என்று பொருள். 'ஏல்' என்னும் சொல்லுக்கு 'ஏற்றுக் கொள்ளுதல்' என்றும், 'ஓர்' என்னும் சொல்லுக்கு 'யோசித்துப்பார்' என்றும், 'பாவாய்' என்பதற்கு 'பெண்ணே' என்றும் பொருள் சொல்வர்.''தோழியே! இந்த உலக வாழ்வு நிலையற்றது. இறுதியில் நாம் கண்ணனையே அடைந்தாக வேண்டும் என்று யோசித்துப் பார். அவனை ஏற்றுக்கொள். ஆனால், அவ்வளவு எளிதில் சிக்கமாட்டான். அதற்குரிய விரதத்தைக் கடுமையாக அனுஷ்டிப்போம்,'' என்று அழைப்பு விடுப்பதாக இந்தப் பாடல்களின் கருத்து அமைந்துள்ளது.
ஒரு பாடலில் ''எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?'' என்று கேள்விக்கணைகளால் தூங்குபவளை துளைக்கிறாள் ஆண்டாள். காரணம் உயிர்கள் எல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், உலக இன்பங்களில் சிக்கி அறியாமையில் தன்னை மறந்து உறங்குகின்றன. ஆண்டாள் போன்ற அருளாளர்களே நம்மை வழிகாட்டி நெறிபடுத்துகின்றனர்.
தினமும் சுப்ரபாதம் ஒலிக்கும் திருப்பதியில், மார்கழியில் பாவை பாடல்கள் பாடப்படும்.
திருவெம்பாவை
சிவனைக் குறித்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்களே திருவாசகம். இதன் பெருமையை,' திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று குறிப்பிடுவர். அத்திருவாசகத் தொகுப்பில் திருவெம்பாவை இடம் பெற்றுள்ளது. பாவைநோன்பு நோற்கும் மார்கழி மாதத்தில் இப்பாடல்களைப் பெண்கள் பாடுவர். தன்னைப் பெண்ணாகவும், சிவபெருமானை ஆணாகவும் எண்ணி இப்பாடல்களைப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். இதை 'நாயக நாயகி பாவம்' என்பர். இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'ஏலோர் எம்பாவாய்' என்று இடம்பெற்றிருக்கும். பாவை நோன்பிருக்கும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து புறப்படுவர். ஒவ்வொரு தோழியின் வீட்டு வாசலில் நின்று அவர்களை எழுப்புவர். பின்னர் நீர்நிலையில் நீராடி விட்டு மணல்வெளியில் ஒரு பாவையை(பெண்தெய்வம்) வடித்து வழிபாடு செய்வர். அப்பெண் தெய்வத்தை 'கார்த்தியாயினி' என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கவும், நல்ல கணவன் கிடைக்கவும் வேண்டிக்கொள்வர்.
திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் கொண்டதாகும். இப்பாடல்களும் திருவாசகத்திலேயே இடம்பெற்றுள்ளது. இது இறைவனைத் துயில் எழுப்ப பாடுவதாகும். இறைவன் தூங்கிக்
கொண்டிருக்கிறானா என்ற கேள்வி நம் மனதில் எழும். உள்ளம் என்ற கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதே திருப்பள்ளியெழுச்சி பாடலின் நோக்கம். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ''எம்பெருமானே பள்ளி எழுந்தருளாயே'' என்ற வரி இடம் பெற்றிருக்கும். திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளதால், மார்கழியின்கடைசி பத்து நாட்களில்திருப்பள்ளியெழுச்சி பாடுவது மரபு.