
* வீட்டு வேலையால் சுவாமி கும்பிட நேரமில்லையே...
எஸ்.காயத்ரி, மதுரை
குடும்பப் பெண்கள் ஸ்லோகம், மந்திரம் சொல்லியபடி சமையலில் ஈடுபடுவர். இடையில் சுவாமிக்கு பூ சாத்துதல், நைவேத்யம் செய்தல், தீபம் காட்டுதலையும் செய்து முடிப்பர். தெய்வீக சிந்தனையுடன் சமைக்கப்பட்ட உணவால், அதை உண்பவருக்கும் பக்தி உணர்வு ஏற்படும். அதனால் குடும்பமே கோயில் போல பொலிவுடன் திகழும். வீட்டு வேலைக்கு இடையே ஸ்லோகம் சொல்வது நல்லது.
எண்ணெய் ஸ்நானம் செய்ய ஏற்ற நாட்கள் எவை?
பி.உமா, விருதுநகர்
பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நீராடுவது சிறப்பு. புதன்கிழமை அனைவருக்கும் பொதுவான நாள்.
* புயல் போன்ற இயற்கை சீற்றத்தில் தப்பிக்க வழி உண்டா?
வி.வசந்த், புதுச்சேரி
மஹா ருத்ரம், சுதர்சன யாகம், சண்டீ ஹோமங்களை நடத்தலாம். இவற்றை விட தினமும் கோயில்களில் பூஜை செய்வது முக்கியம். இன்று பல கோயில்களில் ஒருகால பூஜை கூட நடப்பதில்லை. அதனால் துன்பங்கள் அதிகரிக்கின்றன. இதனையே 'கோயில் விளங்க குடி விளங்கும்' என்றனர்.
* கோயிலுக்கு போகும் வழியில் சவ ஊர்வலம் வந்தால் என்ன செய்வது?
எம்.கதிர், திருவள்ளூர்
இயற்கையாக நிகழும் சம்பவம் இது. மாற்றுவழியில் கோயிலுக்குச் செல்லலாம். ஊர்வலத்தைக் கடந்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தால் ஒதுங்கி நின்று ஊர்வலம் கடந்த பிறகே செல்ல வேண்டும். உடன் செல்பவர்கள் நம் மீது படாமலும், துாவப்படும் பூக்கள் படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி பட்டால் குளித்த பிறகே கோயிலுக்குப் போக வேண்டும்.
அட்சதையை தயாரிப்பது எப்படி?
எம்.லதா, சென்னை
முனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் துாள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்தால் அட்சதை தயார். 'சோபன அட்சதை' என்று இதனைச் சொல்வர்.
* கடவுளை மனதில் நினைத்தால் மட்டும் போதாதா?
எல்.பிரசன்னா, பொள்ளாச்சி
'கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க. சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க' என்கிறது சிவபுராணம். கோயில் கோபுரங்கள், தெய்வச்சிலைகளைக் கண்டால் கைகூப்பி வழிபட வேண்டும்.