
* மகாவிஷ்ணுவை விராட்புருஷன் என அழைப்பது ஏன்?
பி.ரினுஷா, ஊட்டி
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்து விடும். மீண்டும் உலகைப் படைக்க அளவிடமுடியாத சக்தியுடன் ஆயிரம் தலைகள், கைகளுடன் பிரம்மாண்ட வடிவத்தில் மகாவிஷ்ணு அவதரிப்பார். அவரிடமிருந்தே பூமி, சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்கள், உயிர்கள் எல்லாம் உற்பத்தியாகும். இக்கோலத்தில் தனக்கென தலைவன் இல்லாதவராக விராட்புருஷன் என மகாவிஷ்ணு பெயர் பெறுகிறார். வி+ராட்= தலைவன் இல்லாதவர். ஒப்புமை இல்லாத ஆற்றல் கொண்டவர் என்பது பொருள்.
கருவறையில் மின்சாதனம் இருக்கலாமா....
எம்.சுதாகர், திருவள்ளூர்
பூஜைக்கு உரியவை தவிர மின்சாதனம் உள்ளிட்டசெயற்கை பொருட்கள் இருக்கக் கூடாது.
பிரம்மஹத்தி தோஷம் பற்றி சொல்லுங்கள்
எஸ்.நிரஞ்சன், விழுப்புரம்
நல்லவர்களை குறிப்பாக அந்தணர்களைத் துன்புறுத்திய பாவமே பிரம்மஹத்தி. இதைச் செய்தவர்களின் வாழ்வில் நிம்மதி இருக்காது. அந்தணர்களுக்கு தானம் அளிப்பதும், காசி, காஞ்சிபுரம், திருவிடைமருதுார், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற தலங்களை தரிசிப்பதும் இதற்கான பரிகாரம்.
பிளாஸ்டிக்கில் ஆன சுவாமி பொம்மையை வழிபடலாமா?
எம்.வினோத், பெங்களூரு
பிளாஸ்டிக்கில் செய்த பொம்மைகளை வரவேற்பறையில் அழகுக்காக பயன்படுத்துங்கள். கல், மண், பளிங்கு, உலோகத்தால் ஆன சிலைகள் வழிபாட்டுக்கு ஏற்றவை.
* பவுர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் கிரிவலம் போகலாமா?
பி.கோகிலா, விருதுநகர்
தெய்வத்தின் வடிவாகிய மலையை எந்த நாளில் சுற்றினாலும் நன்மை கிடைக்கும்.
பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவது அவசியமா?
எல்.வசந்தன், திருவள்ளூர்.
ஆம். பெரியவர்களின் காலை தொட்டு வணங்குவது நல்லது. அதைவிட ஆன்மிக பெரியோர்களின் காலை தொட்டு வணங்குவது விஷேசம். இதனால் முன்வினை பாவம் தீரும்.
* சுப்ரபாதத்தை மாலையில் பாடலாமா?
எம்.வந்தனா, புதுச்சேரி
சுப்ரபாதம் என்பதற்கு 'மங்களகரமான அதிகாலை' என்பது பொருள். எனவே காலையில் மட்டும் பாடவும். மற்ற நேரங்களில் வேண்டாம்.
விதி, மதி - எது வலிமையானது?
எம்.பல்லவி, மதுரை
பல பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்தின் பலன் விதியாகிறது. அதை நாம் அனுபவித்தாக வேண்டும். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா', 'ஊழ்வினை உறுத்து வந்துாட்டும்' என்று சொல்வர். விதி வலியதாக இருந்தாலும் கடவுளை கும்பிட்டால் ஓரளவு தப்பலாம்.
* வில்வ அர்ச்சனை மகிமை...
எம்.எஸ்.சாய்ரேகா, சென்னை
மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவம் பறந்தோடும். திங்களன்று அர்ச்சனை செய்ய மனபலம் அதிகரிக்கும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.