
* சகுனம் பார்ப்பது கட்டாயமா?
எம்.இனியாள், சிவகங்கை
முக்கிய விஷயங்களுக்கு சகுனம் பார்த்தால் போதும். அப சகுனம் கண்ணில் பட்டால் அதற்கான பரிகாரம் செய்யலாம்.
பிரம்மாவுக்கு கோயில் இல்லையே ஏன்?
எம்.துஷ்யந்த், கோவை
அண்ணாமலையின் அடி, முடியைத் தரிசிக்க பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் புறப்பட்டனர். ஆனால் பாதியில் திரும்பிய பிரம்மா, முடியைக் கண்டதாகவும், தாழம்பூ அதற்கு சாட்சி என்றும் பொய் கூறினார். இதனால் பிரம்மாவுக்கு கோயில் இல்லை.
* உள்ளமே கோயில் என்னும் போது கோயில் வழிபாடு தேவையா?
எம்.சந்தோஷ், குன்னுார்
உள்ளத்தை வசப்படுத்திய மகான்களுக்கு மட்டுமே உள்ளம் கோயிலாகத் திகழும். இது மனிதர்களுக்கு பொருந்தாது.
* இறந்தவரை வழிபட்டால் அவர்கள் நம் வீட்டிலேயே இருக்க நேரிடுமா?
சி.ராம் சுமந்த், கடலுார்
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அல்லவா! அதுபோல இறந்தவர்களின் ஆன்மா எங்கும் நிறைந்திருக்கும். தெய்வநிலை அடைந்த அவர்கள் பிதுர்லோகத்தில் வாழ்ந்து நம் வழிபாட்டை ஏற்று அருள்புரிவர்.
லட்சுமி வரும் போது சரஸ்வதி ஒதுங்குவாள் என்பது ஏன்?
எல்.அனுதீபா, மதுரை
பணம் சேரச் சேர மனிதனுக்கு புத்தி தடுமாறும் என்பதைச் சொல்லும் பழமொழி இது. மகாலட்சுமி, சரஸ்வதிக்கு இடையே முரண்பாடு கிடையாது.
செந்துாரம் வைப்பதால் நன்மை கிடைக்குமா?
பி. ஸ்ரீகஷிகா, காஞ்சிபுரம்
செந்துாரம் என்பது குங்குமத்தைக் குறிக்கும். அனுமனின் பிரசாதமாக தரும் குங்குமத்தையே 'செந்துாரம்' எனச் சொல்கின்றனர். இதை நெற்றியில் இட்டால் வெற்றி, செல்வம் உண்டாகும்.
இரட்டை வாழைப்பழத்தை சுவாமிக்கு படைக்கலாமா?
வி.சாய்தீப், புதுச்சேரி
இயல்புக்கு மாறாக இருப்பதால் இரட்டை பழத்தை சுவாமிக்கு படைக்க, சாப்பிடக் கூடாது.
* ஆடிவெள்ளியன்று பெண்களுக்கு வளையல் தருவது ஏன்?
டி.அபிசக்தி, சென்னை
பூலோகத்தில் அம்மன் அவதரித்து நதிகளுக்குப் புனிதத்தன்மை அளித்தது ஆடியில் தான். இதனால் ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு நாளில் அம்மன், நதி வழிபாடு நடக்கும். அப்போது அம்மனுக்கு வளையல், பாசிப்பருப்பும், நதிகளுக்கு மங்கல பொருட்களை படைத்து வழிபட்டு பெண்களுக்கு பிரசாதமாக அளிப்பர்.