ADDED : அக் 10, 2021 05:16 PM

எஸ்.செளம்யா, சென்னை
* சுவாமி படங்களுக்கு பிளாஸ்டிக் பூக்கள் அணிவிக்கலாமா?
பூஜைக்கு உகந்த பூக்களை உபயோகப்படுத்தலாமே. வாசனையற்ற பிளாஸ்டிக் பூக்கள் தேவைதானா...
கே.கே.வெங்கடேசன் செங்கல்பட்டு
* கலியுகத்திற்கு பின்னர் எந்த யுகம் வரும்?
கிருத, திரேதா, துவாபர, கலி என யுகங்கள் நான்கு. இவை சுழற்சியாக வரும். கலியுகம் முடிந்ததும் நல்லவர்கள் வாழும் கிருதயுகம் வரும்.
பி.திவாகர், மைசூரு
* வீட்டில் உள்ள சுவாமி சிலைகளுக்கு எந்த நாளில் அபிஷேகம் செய்யலாம்?
கருங்கல் சிலைகளுக்கு தினமும் அபிஷேகம் செய்யலாம். உலோகச் சிலைகளுக்கு வெள்ளி அல்லது பவுர்ணமி தோறும் அபிஷேகம் செய்யலாம்.
நா.செண்பகவல்லி, திருநெல்வேலி
* பூஜையறையில் வாராஹியம்மன் படம் இருக்கலாமா?
இருக்கலாம். வளர்பிறை பஞ்சமியன்று இவளை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
ர.ரேவதி, பள்ளிச்சேரி,விழுப்புரம்
* முன்னோர்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா?
முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்திருந்தால் அவர்கள் உங்கள் கனவில் வருவது நன்மையே. இல்லாவிட்டால் முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்யுங்கள்.
கே.யோகலட்சுமி, கடலுார்
* திரிசங்கு நிலை என்றால் என்ன?
மன்னரான திரிசங்கு, விஸ்வாமித்திரர் மூலம் உடலோடு சொர்க்கம் சென்றார். ஆனால் அவரை தேவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற விஸ்வாமித்திரர் சுவர்க்கம் ஒன்றை உருவாக்கி அந்தரத்தில் நிறுத்தினார். பூமிக்கும், வானத்திற்கும் இடையில் திரிசங்கு வாழ நேர்ந்தது.
வி.மனோன்மணி, மதுரை
* நேர்த்திக்கடன் செலுத்த தாமதம் ஏற்பட்டால் தெய்வக்குற்றமா?
இயற்கையாக தடைபட்டால் குற்றம் ஆகாது. பணவசதி இருந்தும், நேர்த்திக்கடனை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தும் தாமதம் செய்தால் தெய்வக் குற்றம் ஏற்படும்.
எம்.விஜயலட்சுமி, விருதுநகர்
* அறிந்தே செய்த பாவம் தீர என்ன செய்யலாம்?
பாவச் செயல்களில் ஈடுபட வெட்கப்பட வேண்டும். இதிலிருந்து விடுபட கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள். இனி பாவம் செய்வதில்லை என உறுதி எடுங்கள்.
அ.ரூபினா, கோவை
* மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்கிறார்களே...
மூர்த்தி என்றால் உடல். கீர்த்தி என்றால் மகிமை அல்லது புகழ். தெய்வத்தின் சிலை சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை அதிகம். அது போல மனிதர்கள் சிலர் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் புகழில் பெரியவராக இருப்பர் என்பதை இப்படி சொல்வர்.
தி.வசந்தா, கடையம், தென்காசி
* காலை, மாலை, இரவு - இதில் வழிபாட்டுக்கு ஏற்ற நேரம் எது?
மூன்றும் வழிபாட்டுக்கு ஏற்றவை என்றாலும் மாலை வழிபாடு மிக அவசியம்.
