ADDED : மார் 08, 2022 04:54 PM

எல்.கலையரசி, கோவை
* எந்தெந்த நாட்களில் விளக்கை துலக்கலாம்?
கீழ்க்கண்ட நாட்கள் தவிர மற்ற நாட்களில் துலக்கலாம். செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி
சி.புவனேஸ்வரி, விருதுநகர்
* அவசரமாக பூஜை செய்கிறேன். இது தவறா?
பூஜையை அவசரமாக செய்வது தவறு. பொறுமையாக பூஜை செய்யுங்களேன்.
டி.திருமுருகன், விழுப்புரம்
* கடவுள் பூமியை ஏன் உண்டாக்கினார்?
பாவம் செய்தவர்கள் நரக உலகத்தையும், புண்ணியம் செய்தவர்கள் சொர்க்க லோகத்தையும் அடைவர். பாவம், புண்ணியத்தை கலந்து செய்தவர்களுக்காக பூமியை கடவுள் உண்டாக்கினார்.
எல்.ஹரிணி, பெங்களூரு
* வயதில் பெரியவர்களுக்கு சிறியவர்கள் திருஷ்டி சுற்றலாமா?
வயதில் சிறியவர்கள் திருஷ்டி சுற்றக் கூடாது.
பி.நாகராஜ், நாகர்கோவில்
* குளிக்காத நிலையில் முகம் கழுவி திருநீறு, குங்குமம் இடலாமா?
அப்படி செய்யக் கூடாது. முதுமை காரணமாக குளிக்காத நிலையில் தலை, நெற்றி, உடலில் திருநீறை பூசலாம். 'பஸ்ம ஸ்நானம்' அல்லது 'விபூதிக்குளியல்' என்று இதைச் சொல்வர்.
எம்.திவ்யா, திருவள்ளூர்
* செவ்வாய், வெள்ளியன்று பூஜை செய்தால் போதுமா?
போதாது. தினமும் பூஜை செய்வது அவசியம். விளக்கேற்றி சுவாமிக்கு பூக்கள் சாத்தி நிவேதனமாக கற்கண்டு அல்லது பழங்கள் வைக்க ஐந்து நிமிடம் போதும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி போன்ற பாடல்களைப் பாடி பூஜை செய்வது சிறப்பு.
ஆர்.மகாலட்சுமி, கோவில்பட்டி
* வீட்டில் மராமத்து வேலை பார்ப்பவருக்கு வெள்ளியன்று சம்பளம் தரலாமா?
தாராளமாக தரலாம். கூலி தர நாள், கிழமை பார்க்காதீர்கள். உழைத்தவர்களுக்கு வெள்ளியன்று சம்பளம் கொடுத்தால் நன்மை உண்டாகும்.
கே.சங்கரமூர்த்தி, காஞ்சிபுரம்
* ஆழ்ந்த துாக்கம் வர என்ன செய்யலாம்?
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் துாங்கச் செல்லுங்கள். ஆன்மிகப்பாடல்கள், சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு இருந்தாலே துாக்கம் வந்து விடும்.
எல்.லீலாவதி, திண்டுக்கல்
* முகக்கவசம் தானம் செய்தால் புண்ணியம் சேருமா?
நோய் தொற்று பரவும் நிலையில் புதிய முகக்கவசங்களை (மாஸ்க்) கொடுப்பது புண்ணியமானதே. வருமானம் இன்றி சிரமப்படுவோருக்கு பண உதவியும் செய்யலாம்.
